கடலூர் மாவட்டத்தில், நாளைக்குள் தேர்தல் பணிக்கான படிவம் வழங்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை
நாளைக்குள் தேர்தல் பணிக்கான படிவம் வழங்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
கடலூர்,
வருகிற 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. ஏற்கனவே இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு, தொகுதி வாரியாக தேர்தல் அதிகாரிகள் நியமனம் என தேர்தல் ஆணையம் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல் படி நடத்த மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சந்திரசேகர் சாகமூரி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கிடையில் இந்திய தேர்தல் ஆணையம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களை நியமனம் செய்ய அறிவுறுத்தி உள்ளது.
படிவம் அனுப்பவில்லை
இதற்காக தேர்தல் பணியில் ஈடுபடும் கடலூர், வடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களுக்கு படிவம் 1 வழங்கப்பட்டு, அந்த படிவத்தை பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால் கருவூலம் மூலம் சம்பளம் பெற்று வரும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் 10 ஆயிரத்து 273 பேரில், 9 ஆயிரத்து 244 பேர் மட்டுமே படிவத்தை வழங்கி உள்ளனர். மீதியுள்ள 1, 029 பேர் படிவத்தை அனுப்பி வைக்கவில்லை. இது பற்றி அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல முறை அறிவுறுத்தியும் அவர்கள் இது வரை தேர்தல் பணிக்காக படிவத்தை வழங்கவில்லை.
இது பற்றி தகவல் அறிந்ததும், மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட கல்வி அலுவலர்களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளார். அதன் விவரம் வருமாறு:-
நடவடிக்கை
மாவட்ட கல்வி அலுவலர்களை அழைத்து கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இருப்பினும் தேர்தல் பணியாற்ற இருக்கும் பணியாளர்கள் படிவத்தை பெற்று வழங்கவில்லை. மாவட்ட நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு நல்கவில்லை. இதனால் தேர்தல் ஆணையத்திற்கு மாவட்டத்திற்கான வாக்குப்பதிவு அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டியத்திற்கான அறிக்கை சமர்ப்பிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் விடுபட்டுள்ள அனைத்து பணியாளர்களுக்கான (ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள்) படிவம் 1-யை மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு தனிநபர் மூலம் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும். தவறும் பட்சத்தில், மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியாமல் தேர்தல் பணியை புறக்கணிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கருதி, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story