மனைவி இரவு நேர வேலைக்கு செல்வது பிடிக்காததால் புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை
இரவு நேர வேலைக்கு மனைவி செல்வது பிடிக்காததால் திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
வீரபாண்டி:
இரவு நேர வேலைக்கு மனைவி செல்வது பிடிக்காததால் திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தையல் தொழிலாளி
திருப்பூர் வீரபாண்டி அருகே உள்ள குறிஞ்சி நகர் ஆசாரி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பிரித்திவிராஜ் (வயது 24). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சத்யா (24) என்ற பெண்ணுடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சத்யா வேறு ஒரு பனியன் நிறுவனத்துக்கு இரவு நேர வேலைக்கு சென்று வந்தார். இவர்கள் இருவரும் ஆசாரி தோட்டம் பகுதியில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தனர்.
தீக்குளித்து தற்கொலை
இந்த நிலையில் சத்யா பனியன் நிறுவனத்துக்கு இரவு நேரங்களில் வேலைக்கு சென்று வருவது பிரித்திவிராஜ்க்கு பிடிக்கவில்லை. இதனால் அவ்வப்போது சத்யாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கிடையில் சம்பவத்தன்று இரவு வேலைக்கு செல்லக்கூடாது என்று சத்யாவிடம் பிரித்திவிராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
ஆனால் சத்யா அதனை மீறி இரவு நேர வேலைக்கு சென்றதால் ஆத்திரம் அடைந்த பிரித்திவிராஜ் வீட்டில் வைத்திருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். சிறிது நேரத்தில் பிரித்விராஜ்ஜின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சென்று அவரை மீட்டனர். ஆனால் தீ மளமளவென்று உடல் முழுவதும் பரவியதால் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். இந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பிரித்திவிராஜ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story