டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தடையை மீறி இரு சக்கர வாகன பேரணி கடலூரில் 200 பேர் கைது


டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தடையை மீறி இரு சக்கர வாகன பேரணி கடலூரில் 200 பேர் கைது
x
தினத்தந்தி 27 Jan 2021 10:34 AM IST (Updated: 27 Jan 2021 10:36 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில், தடையை மீறி இரு சக்கர வாகன பேரணியாக சென்ற முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.


 கடலூர், 

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கடலூரில், தடையை மீறி இரு சக்கர வாகன பேரணியாக சென்ற முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

தடை

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கடலூரில் டிராக்டர் மற்றும் இரு சக்கர வாகன பேரணி நடத்தி கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் அறிவித்தனர்.
ஆனால் பேரணி நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தடை விதித்தார். மீறி பேரணி நடத்தினால் டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் தடையை மீறி பேரணி நடத்தப்படும் என்று போராட்ட குழுவினர் அறிவித்தனர்.

பேரணி

அதன்படி நேற்று காலை போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் மாதவன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், விவசாயிகள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் தடையை மீறி அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் பேரணியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி புறப்பட்டு வந்தனர்.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், தி.மு.க. நகர செயலாளர் ராஜா, காங்கிரஸ் மாவட்ட தலைவர் திலகர், வக்கீல் சந்திரசேகரன், நகர தலைவர் வேலுச்சாமி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் என்.ராமலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் அமர்நாத், இந்திய கம்யூனிஸ்டு கட்சி குளோப், மக்கள் அதிகாரம் பாலு, தி.க. மாவட்ட செயலாளர் சிவக்குமார், தொ.மு.ச. பழனிவேல், ஐ.என்.டி.யு.சி. மனோகரன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

கைது

பேரணியில் வந்தவர்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் துண்டுபிரசுரங்களையும் வழங்கினர்.
இந்த பேரணி அண்ணா பாலம், பாரதி சாலை வழியாக வந்து கடலூர் சில்வர் பீச் சாலை சிக்னல் அருகே வந்த போது, அங்கு தடுப்பு கட்டைகளை வைத்து அடைத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து தடையை மீறி பேரணியாக வந்ததாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாதவன், முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்து, அங்குள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக இந்த பேரணியை யொட்டி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் தலைமையில் 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 13 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 50 சப்-இன்ஸ்பெக்டர்கள் என 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சிதம்பரம்

சிதம்பரத்தில் நேற்று காலை அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தேசிய கொடியை ஏந்தி இருசக்கர வாகன அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
சிதம்பரம் வடக்கு வீதி தலைமை தபால் நிலையம் அருகே இருந்து புறப்பட்ட வாகன பேரணியை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் வி.எம்.சேகர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
பேரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் ராமச்சந்திரன், வாஞ்சிநாதன், தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகிகள் கற்பனைச் செல்வம், பிரகாஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் தமிமுன் அன்சாரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பால.அறவாழி, நிர்வாகிகள் செல்வமணி, கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் சக்காப், செயலாளர் கண்ணன், விவசாயிகள் சங்க தலைவர் அத்திப்பட்டு மதிவாணன், வீராணம் ஏரி பாசன விவசாயிகள் சங்க தலைவர் பாலு, கரும்பு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் ஆதிமூலம், த.மு.மு.க. நிர்வாகி அஸ்லாம் உள்பட பலர் கலந்து கொண்டனர். .தலைமை தபால் நிலையத்தில் இருந்து இரு சக்கர வாகனங்களில் புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாக சிதம்பரம் காந்தி சிலை அருகே நிறைவுற்றது.

Next Story