வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாகையில், தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த முயற்சி


வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாகையில், தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த முயற்சி
x
தினத்தந்தி 27 Jan 2021 11:53 AM IST (Updated: 27 Jan 2021 11:53 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாகையில், தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்,

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று ஒரு லட்சம் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என அறிவித்தனர். அவர்களுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் நாகை மாவட்டத்திலும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் டிராக்டர் மற்றும் வாகன பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை.

தடையை மீறி நாகை புத்தூர் ரவுண்டானாவில் இருந்து பேரணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டதால் அந்த பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகா‌‌ஷ் மீனா உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகேசன் தலைமையில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் போராட்டக்காரர்கள், டிராக்டரில் வருவதை தடுக்க ரவுண்டானாவில் 4 திசைகளிலும், சாலையின் குறுக்கே லாரிகளை நிறுத்தியும், இரும்பு தடுப்புகளையும் வைத்திருந்தனர். வஜ்ரா வாகனமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தள்ளுமுள்ளு

அறிவித்தபடி விவசாயிகள் புத்தூர் ரவுண்டானாவில் டிராக்டர்களுடன் வந்து குவிந்தனர். அப்போது டிராக்டர் பேரணிக்கு போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே சிவன் கோவில் தெருவில் இருந்து 4 டாக்டர்கள் போராட்டம் நடக்கும் இடத்திற்கு வேகமாக வந்தது. இதையடுத்து அந்த டாக்டர்களின் ஏறிய போராட்டக்காரர்கள், பேரணி நடத்த முயன்றனர். இதை பார்த்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டம்

இதை தொடர்ந்து டிராக்டரை அதே இடத்தில் நிறுத்திவிட்டு விவசாயிகள் சிறிது தூரம் நடந்து சென்று கிழக்கு கடற்கரை சாலையின் குறுக்கே நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயத்தை அழிக்கும் 3 வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மக்களுக்கு எதிரான மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளை அடக்குமுறை செய்யக்கூடாது. விவசாயிகளின் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். பயிர் காப்பீடு தொகையை முழுமையாக வழங்க வேண்டும்.

நிவாரணம் வழங்க வேண்டும்

நாகை மாவட்டத்தை இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி முழு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் செல்வராஜ் எம்.பி, மதிவாணன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சம்பந்தம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பரிமளசெல்வன், தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் சுப்பிரமணியன் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story