பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கோவை கோர்ட்டில் மேலும் ஒரு இளம்பெண் ரகசிய வாக்குமூலம் பலர் சிக்குகிறார்கள்? + "||" + Pollachi sex case: Another teenager in Coimbatore Court Many get caught up in secret confession?
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கோவை கோர்ட்டில் மேலும் ஒரு இளம்பெண் ரகசிய வாக்குமூலம் பலர் சிக்குகிறார்கள்?
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கோவை கோர்ட்டில் மேலும் ஒரு இளம்பெண் ரகசிய வாக்குமூலம் அளித்து உள்ளார். இதனால் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பலாத்காரம் செய்த வழக்கில் சபரிராஜன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த பாலியல் வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த 5-ந் தேதி அ.தி.மு.க. முன்னாள் மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், பைக் பாபு, ஹெரோன் பால் ஆகிய மேலும் 3 பேரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட 3 பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 3 பேரும் கைது செய்யப்பட்டதாக சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப் பட்டது.
இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி கோவை மகளிர் கூடுதல் கோர்ட்டில் பெண் நீதிபதி (பொறுப்பு) திலகேஸ்வரி முன்பு மேலும் ஒரு இளம் பெண் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், அந்த பெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மேலும் சிலரின் பெயர்களை நீதிபதியிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே இந்த வழக்கில் மேலும் பலர் சிக்க வாய்ப்பு உள்ளதாக சி.பி.ஐ. தரப்பில் கூறப்படுகிறது. இந்த வழக்கில் மேலும் ஒரு இளம்பெண் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. போலீசார் திட்டமிட்டு உள்ளனர். வீடியோ, புகைப்பட ஆதாரங்களை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.