காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை முருகன் கோவில் தைப்பூச தேரோட்டம் இன்று நடக்கிறது
காங்கேயம் அருகே சிவன்மலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
காங்கேயம்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்கு மண்டலத்தில் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். மேலும் சிவவாக்கிய சித்தர் அருள்பெற்ற தலமாகவும், விநாயகப் பெருமான் முருகனை வணங்கும் தலமாகவும் விளங்குகிறது. நாட்டில் வேறு எந்தக்கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது.
இத்தகைய சிறப்பு மிக்க பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சாமி மலைக் கோவிலில் தைப்பூசத்தேரோட்டம் கடந்த வாரம் தொடங்கி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை)காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.
தைப்பூசத்தேரோட்டம்
இதனை முன்னிட்டு, நேற்றுமாலை 4 மணிக்கு சுப்பிரமணியர் மலைக் கோவிலில் இருந்து அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினார். பின்னர் இக்கோவிலில் மாலை 5 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இதனையடுத்து இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 6 மணிக்கு சாமி ரதத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்று, பின்னர் காலை 7 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஒரு நாள் மட்டும்
காலை 7 மணிக்கு திருத்தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு, தெற்கு ரத வீதியைக் கடந்து கிரிவலப்பாதையில் மதியம் 12 மணியளவில் தேர்நிலை நிறுத்தப்படுகிறது. பின்னர் மாலை 3 மணிக்கு திருத்தேர் தொடர்ந்து பக்தர்களால் இழுக்கப்பட்டு, மாலை 6 மணியளவில் திருத்தேர் நிலையை அடைகிறது.
சிவன்மலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த முறை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, ஒருநாள் மட்டுமே தேரோட்டம் நடைபெறவுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
தேரோட்டத்தின் போது அமைக்கப்படும் தற்காலிகக்கடைகளுக்கு இந்த முறை அனுமதி வழங்கப்படவில்லை. தேரோட்டத்தை முன்னிட்டு, போலீஸ் நிலையம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேரோட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story