திருவாரூரில் தடையை மீறி டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. உள்பட 11 பேர் மீது கொலை முயற்சி வழக்கு
திருவாரூரில் தடையினை மீறி விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. உள்பட 11 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,
3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றிடவும், தமிழக அரசு வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பினை தெரிவிக்க வலியுறுத்தியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் திருவாரூர் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்துவதாக அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து தடைவிதித்திருந்தனர்.
ஆனாலும் தடையை மீறி நேற்றுமுன்தினம் டிராக்டர் பேரணி நடந்தது. திருவாரூர் பகுதி எல்லையான தண்டலையில் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகள் அமைத்து போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் தலைமையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மாசிலாமணி முன்னிலையில் விவசாயிகள் திரண்டு வந்து தடுப்புகளை உடைத்து டிராக்டர் பேரணி நடத்தினர்.
7 பிரிவின் கீழ் வழக்கு
இந்தநிலையில் தடையினை மீறி டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ., விவசாயிகள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மாசிலாமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் செந்தில், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் துரைவேலன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தம்புசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் கேசவராஜ், தி.மு.க. வை சேர்ந்த பாரதி, வெங்கடேசன், கலைவேந்தன், துரைராஜ் மற்றும் சிலர் மீது தடையினை மீறுதல், பயங்கர ஆயுதங்களுடன் கலகம் செய்யும் வகையில் சட்டவிரோதமாக கூட்டம் கூட்டுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி ஆபாசமாக பேசுதல், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை முயற்சி செய்தல், பொதுசொத்தை சேதப்படுத்துதல், கொரோனா நோய் தொற்று காலத்தில் விதிமுறைகளை மீறி கூட்டம் கூடி பாதிப்பினை ஏற்படுத்துதல் ஆகிய 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3 பேர் கைது
மேலும் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 5 பேரிகார்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தம்புசாமி, பாரதி, துரைராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் துரைராஜ் என்பவர் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story