திருவாரூரில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


திருவாரூரில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Jan 2021 6:28 AM GMT (Updated: 28 Jan 2021 6:28 AM GMT)

டிராக்டர் பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தி திருவாரூரில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர், 

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிர்மலா உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூரில் டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் நல சங்க மாநில தலைவர் சேதுராமன் தலைமையில் விவசாயிகள் கூட்டத்தில் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்ட அறையில் பரபரப்பு ஏற்பட்டது.

தூர்வார வேண்டும்

இதனை தொடர்ந்து நடந்த கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து பேசினர். அதன் விவரம் வருமாறு:-

கணேசன்:- நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் தர வேண்டும் என கட்டாயப்படுத்துவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்க வேண்டும். காரியாங்குடி நாட்டாறு பகுதியில் இருந்து அம்பரத்தூர் செல்லும் வழியில் இடிக்கப்பட்ட பாலத்தை உடனே கட்டி தர வேண்டும்.

அழகர்ராஜா:- கள்ளிக்குடி பகுதியில் உள்ள ஒடம்போக்கியாற்று பாலத்தி்ல் பழுதடைந்த ஷட்டரை சீரமைத்திட வேண்டும். மழை காலங்களில் இந்த ஷட்டரில் தண்ணீர் தேங்கி வைக்கும் வழிமுறையை கைவிட வேண்டும். காணூர் பகுதியில் வடிகால் வாய்க்காலை அகலப்படுத்தி தூர்வாரிட வேண்டும்.

ராஜேந்திரன்:- பேட்டை பகுதிக்கு சாலை வசதி, வடிகால் வசதி செய்து தர வேண்டும்.

சுப்பையன்:- நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும். வெளி மாவட்ட நெல் வருவதை தடுக்க வேண்டும். கோடை காலத்தில் ஆறு, வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரிட வேண்டும். வாழ்வாதார உரிமைக்காக போராடும் விவசாயிகள் மீது வழக்கு போடுவதை கைவிட வேண்டும்.

பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும்

சந்திரசேகரன்:- அரசு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கியது போதுமானதல்ல. எனவே மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்கிட வேண்டும். மரைக்கா கோரையாற்றினை தூர்வாரிட வேண்டும். கடைமடை பகுதி மழை, வறட்சியால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால் பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்.

பழனிவேல்:- மழையினால் முற்றிலும் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட முழுமையாக நிவாரணம் வழங்கிட வேண்டும்.

கலைவாணி:- விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். வெளி மாவட்டங்களில் அரசு அறுவடை எந்திரங்களை வரவழைத்திட வேண்டும். கடலை, பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஊராட்சி குளங்களையும் தூர்வாரிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மானியத்தில் பழகன்றுகள்

ராமமூர்த்தி:- நெல் கொள்முதல் நிலையங்களில் வெளிமாவட்ட நெல் வருவதை குழு அமைத்து மாவட்ட எல்லையிலே கண்காணித்து தடுத்திட வேண்டும்.

மருதப்பன்: பழுதடைந்த நீடாமங்கலம்-தஞ்சை சாலையை சீரமைத்திட வேண்டும். தோட்டக்கலை மூலம் பழகன்றுகளை மானியத்தில் வழங்கிட வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Next Story