ஆண்டிப்பட்டி அருகே :விசைத்தறி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


ஆண்டிப்பட்டி அருகே :விசைத்தறி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 28 Jan 2021 3:31 PM IST (Updated: 28 Jan 2021 3:31 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே கூலி உயர்வு வழங்கக்கோரி விசைத்தறி தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்று தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உள்ளனர். இங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட விசைத்தறிக்கூடங்கள் உள்ளன. இங்குள்ள விசைத்தறி கூடத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு கூலி உயர்வு ஒப்பந்தம் செய்யவில்லை. இதனால் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக விசைத்தறி தொழிலாளர்கள் முடிவெடுத்தனர். இந்த நிலையில் தொழிற்சங்கத்தினர் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் என 400-க் கும் மேற்பட்டோர் டி.சுப்புலாபுரத்தில் இருந்து ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு 4 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக நடந்து சென்று ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து விசைத்தறி தொழிலாளர்களுடன் தாசில்தார் சந்திரசேகர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது நாளை (வெள்ளிக்கிழமை) விசைத்தறி உரிமையாளர்களை அழைத்து தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறினர். 

இதனை ஏற்றுக்கொண்ட விசைத்தறி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story