திருவண்ணாமலை: தடையை மீறி பவுர்ணமி கிரிவலம் சென்ற பக்தர்கள்
திருவண்ணாமலையில் தடையை மீறி பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் தடையை மீறி பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்றனர்.
கிரிவலத்துக்கு தடை
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது.
இக்கோவிலுக்கு பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் மாதத்தில் வந்த பவுர்ணமியில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான முதல் பவுர்ணமி இன்று அதிகாலை 1.45 மணி தொடங்கி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1.55 மணிக்கு நிறைவடைகிறது. புதிய வகை கொரோனா பரவுவதால் இந்த பவுர்ணமிக்கும் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது.
தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு
இதையடுத்து போலீசார் கிரிவலப் பாதையில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நேற்று இரவில் இருந்தே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் தடையை மீறி கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.
கிரிவலம் சென்றவர்களை போலீசார் எந்த தடையும் செய்யவில்லை. அதேபோல் இன்றும் போலீசார் யாரையும் தடுக்க வில்லை. தனித் தனியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் பக்தர்களை கிரிவலம் செல்ல அனுமதி அளித்து விட்டு கிரிவலப் பாதையில் செங்கம் சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தடுப்புகள் வைத்து மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்களை கிரிவலப் பாதைக்குள் செல்ல விடாமல் தடுத்தனர்.
இதனால் கிரிவலப்பாதையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் அவதி அடைந்தனர்.
சில இடங்களில் பொதுமக்களுக்கும், போலீசாருக்கு இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது.
==========
Related Tags :
Next Story