சிறுமியை நிலாவாக பாவித்து கிராம மக்கள் 100 ஆண்டுகளாக நடைபெறும் வினோத வழிபாடு
வேடசந்தூர் அருகே உலக அமைதி வேண்டி, மழை வேண்டி சிறுமியை நிலாவாக பாவித்து விடிய, விடிய கிராம மக்கள் வினோத வழிபாடு நடத்திய திருவிழா நடந்தது.
வேடசந்தூர்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கோட்டூர் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பவுர்ணமி நாளில், சிறுமியை நிலாவாக பாவித்து வினோத வழிபாடு நடத்துவது வழக்கம். உலக அமைதி, மழை வேண்டி இந்த வழிபாடு பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது.
இதற்காக, தேர்வு செய்யப்படும் சிறுமி 3 ஆண்டுகள் நிலா சிறுமியாக இருப்பார். அதாவது வயதுக்கு வராத சிறுமிகள், மாசடச்சியம்மன் கோவிலுக்கு வந்து பால் படைப்பார்கள். இதே போல் தொடர்ந்து 7 நாட்கள், தங்களது வீடுகளில் இருந்து சிறுமிகள் வித, விதமாக சாதத்தை கோவிலுக்கு கொண்டு வருவர். பின்னர் அந்த சாதத்தை ஒன்றாக கலந்து, அதன் ஒரு பகுதியை கோவிலில் படைத்து அதில் விளக்கேற்றுவார்கள். இறுதியாக அந்த சாதத்தை அனைவரும் பகிர்ந்து சாப்பிடுவார்கள். இதே போல 7 நாட்கள் கடைபிடிக்கப்படும்.
இந்தநிலையில் பவுர்ணமி அன்று இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருக்கும் சிறுமியை நிலா சிறுமியாக கிராம மக்கள் தேர்வு செய்வர்.
ஆவாரம் பூக்கள்
அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக, அதே ஊரை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் கனிஷ்கா (வயது 9) நிலா சிறுமியாக தேர்வு செய்யப்பட்டாள். இவள் வேடசந்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
இந்நிலையில் இன்று தை மாத பவுர்ணமியையொட்டி இந்த வினோத வழிபாடு நடைபெற்றது. அதையொட்டி இன்று இரவு 9 மணிக்கு கிராம பெண்கள், கனிஷ்காவை ஊர் எல்லையில் உள்ள சரளி மலைக்கு அழைத்துச்சென்றனர்.
அங்கு பெண்கள் ஆவாரம் பூக்களை மாலையாக தொடுத்து நிலா சிறுமியின் தலை, கழுத்து, கைகளில் அணிவித்து அலங்கரித்தனர். பின்னர் ஒரு கூடை நிறைய ஆவாரம் பூக்களை நிலா சிறுமி தலையில் சுமந்தவாறு ஒரு கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக கோட்டூருக்கு அழைத்து வரப்பட்டாள்.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சார்பில், ஊர் முக்கியஸ்தர் ஜெயக்குமார் தலைமையில் தாரை, தப்பட்டை முழங்க நிலா சிறுமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் மாரியம்மன் கோவிலில் மற்ற சிறுமிகளுடன் அமர வைக்கப்பட்ட நிலா சிறுமியை சுற்றி ஆண்களும், பெண்களும் கும்மி அடித்து பாட்டுப்பாடினர்.
ஓலைக்குடிசை
பின்னர் மாசடச்சியம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்ட நிலா சிறுமிக்கு,, பச்சை தென்னை மட்டையால் அந்த சிறுமியின் முறைமாமன்கள் ஓலைக்குடிசை (வயதுக்கு வந்த பெண்களுக்கு சடங்கு செய்வதுபோல) கட்டி அதில் அமர வைத்து சடங்குகள் செய்தனர். அதைத்தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்துவந்தனர்.
அதன் பிறகு குடிசையில் உள்ள சிறுமியை வெளியேற்றி கோவில் முன்பு மாவிளக்குகள் வைத்து, அதன் நடுவே சிறுமியை அமரவைத்து சுற்றி வந்து பெண்கள் பாட்டுப்பாடி கும்மி அடித்தனர்.
பின்னர் அதிகாலையில் கிராம மக்கள் நிலா சிறுமியை, ஊர் எல்லையில் உள்ள கிணற்றுக்கு அழைத்து சென்றனர். அங்கு, கூடையில் கொண்டு வந்த ஆவாரம் பூக்களை பொதுமக்கள் கிணற்றில் உள்ள தண்ணீரில் போட்டனர். அவை பந்துபோல மிதந்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன் நிலா சிறுமி கிணற்றுக்குள் இறங்கி, மிதந்த பூக்கள் மீது மண் கலயத்தை வைத்து எண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றினாள். பின்னர் பொதுமக்கள் சிறுமியுடன் அங்கிருந்து திரும்பினார்கள்.
கிணற்றில் ஏற்றிய விளக்கு 7 நாட்கள் அணையாமல் எரிந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது. 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வினோத திருவிழாவை கோட்டூர் கிராம மக்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story