முருகன் கோவில்களில் தைப்பூச விழா
மாவட்டம் முழுவதும் முருகன் கோவில்களில் தைப்பூச விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தேனி ,
தேனி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச விழா நேற்று கொண்டாடப்பட்டது. கோவில்களில் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தேனி கணேச கந்தபெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் முருகன் அருள் பாலித்தார். அதுபோல், தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தைப்பூச விழாவையொட்டி தேனி அல்லிநகரம் மலையடிவாரத்தில் உள்ள வீரப்ப அய்யனார் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
கோவில் வளாகத்தில் பனசலாறு தைப்பூச அன்னதான குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மாவூற்று வேலப்பர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் நேற்று தைப்பூச விழாவையொட்டி சாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தைப்பூச விழாவையொட்டி ஆண்டிப்பட்டியில் இருந்து மாவூற்று வேலப்பர் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
கம்பம் நகரில் உள்ள சுருளிவேலப்பர் கோவிலில் ராஜா அலங்காரத்தில் சுருளிவேலப்பர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல் கவுமாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பாலமுருகன் கோவில், கம்பராயப்பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள சண்முகநாதர், ஆதிசக்தி விநாயகர் கோவில்களில் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராயப்பன்பட்டி அருகே வனப்பகுதியில் சண்முகநாதர் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி சண்முகநாதருக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெற்றது.
Related Tags :
Next Story