நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழா தீர்த்தவாரி- திரளான பக்தர்கள் தரிசனம்
நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழா தீர்த்தவாரி நெல்லை சந்திப்பு கைலாசபுரம் மண்டபத்தில் நடந்தது.
நெல்லை,
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந்் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. கடந்த 22-ந் தேதி பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடந்தது.
10-ம் நாளான நேற்று நெல்லை சந்திப்பு கைலாசபுரம் சிந்துபூந்துறை தீர்த்தவாரி மண்டபத்தில் தைப்பூச தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி பகல் 12 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அகஸ்தியர், தாமிரபரணி, குங்கிலிய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர், அஸ்திரதேவி ஆகிய மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.
பின்னர் சுவாமி-அம்பாள் நெல்லையப்பர் கோவிலில் இருந்து புறப்பட்டு சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை வழியாக ஈரடுக்கு மேம்பாலம் கீழ்ப்பகுதியில் உள்ள கைலாசபுரம் சிந்துபூந்துறை தைப்பூச மண்டபம் வந்தடைந்தனர். அவர்களுடன் அகஸ்தியர், தாமிரபரணி, குங்கிலிய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர், அஸ்திர தேவி ஆகிய மூர்த்திகளும் பின்தொடர்ந்து வந்தனர்.
சுவாமி-அம்பாளுக்கு தைப்பூச மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது. தொடர்ந்து மாலை 4.30 மணி அளவில் அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அஸ்திரதேவர், அஸ்திர தேவி ஆகியோருக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ராமராஜா, கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாலையில் சுவாமி-அம்பாள் பரிவார மூர்த்திகளுடன் தீர்த்தவாரி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு டவுன் பாரதியார் தெரு, தெற்கு புது தெரு வழியாக ரதவீதி சுற்றி நெல்லையப்பர் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) சவுந்தர்யா சபா மண்டபத்தில் நடராஜர் திருநடன காட்சி நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) சுவாமி நெல்லையப்பர் கோவில் எதிரே உள்ள சந்திர புஷ்கரணி என்கிற வெளி தெப்பத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் இரவு 7 மணிக்கு தெப்பத் திருவிழா நடக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து உள்ளனர்.
அம்பை காசிநாத சுவாமி கோவிலில், அம்பை நகர வியாபாரிகள் சங்கம் சார்பில் 51-வது ஆண்டு தைப்பூச திருவிழா நடந்தது. அதிகாலை 4 மணிக்கு நடராஜர் முன்பு கோ பூஜை, தீபாராதனை, அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை 7 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, ஹோமம், கும்ப பூஜை நடைபெற்றது. பின்னர் மேலப்பாளையம் தெருவில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் புறப்பட்டு மெயின் ரோடு வழியாக கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா நடந்தது.
அம்பை நகர வியாபாரிகளின் தொழில் அபிவிருத்திக்காக லட்சுமி குபேர பூஜை நடைபெற்று, சண்முகருக்கு 108 சங்காபிஷேகம், அபிஷேக ஆராதனை நடந்தது. மேலும் தாமிரபரணி காசிநாத சுவாமி கோவில் படித்துறையில் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து சண்முகார்ச்சனை அலங்கார தீபாராதனை நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தைப்பூசத்தை முன்னிட்டு நடராஜருக்கு சந்தனம், புனுகு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில், கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணவேணி, நகர வியாபாரிகள் சங்க தலைவர் சந்திரசேகரன் என்ற கண்ணன், செயலாளர் அச்சுதன் நாடார், பொருளாளர் கோவிந்தராஜ், ராஜகோபுர கமிட்டி தலைவர் வாசுதேவராஜா, பொருளாளர் சிவராமன் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், காசிநாதர் நற்பணி மன்ற நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
திருப்புடைமருதூர் கோமதி அம்பாள் உடனுறை நாறும்பூநாதர் சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருதல் நடைபெற்றது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது.
10-ம் திருவிழாவான நேற்று தீர்த்தவாரி நடந்தது. இதை முன்னிட்டு மதியம் 1.15 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் சுவாமி-அம்பாள் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் வீரவநல்லூர், அரிகேசவநல்லூர், திருப்புடைமருதூர், முக்கூடல், வெள்ளாங்குளி, அம்பை மற்றும் சேரன்மாதேவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது. தீர்த்தவாரி முடிந்த பின்னர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் தங்கள் கோவிலுக்கு, தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்து சென்றனர். மாலை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி தெப்பத் திருவிழா நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளல், மாலையில் சிறிய வெள்ளி வாகனத்தில் சண்டிகேஸ்வரர் எழுந்தருளி வீதி உலா வருதல் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் பாரதி, ஆய்வாளர் முருகன், தக்கார் சீதாலட்சுமி, கணக்கர் சங்கரபாண்டி மற்றும் கட்டளைதாரர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்
Related Tags :
Next Story