வேலை கையில் எடுப்பதால் தி.மு.க.வை மக்கள் நம்பமாட்டார்கள்: இல.கணேசன்
வேலை கையில் எடுப்பதால் தி.மு.க.வை மக்கள் நம்பமாட்டார்கள். வேஷம் போட்டு மக்களை ஏமாற்ற முடியாது என தஞ்சையில் இல.கணேசன் கூறினார்
தஞ்சை,
பா.ஜ.க. மூத்த தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான இல.கணேசன் தஞ்சையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நமது பிரச்சினைகளை எல்லாம் தீர்ப்பார்கள் என கருதி தி.மு.க.விடம் ஏற்கனவே மக்கள் கொடுத்த மனுக்களை எல்லாம் பிரித்து கூட பார்க்காமல் கட்டுகளாக கட்டி வைத்துவிட்டு, ஒரு மாதத்திற்கு முன்பு தலைமை செயலாளரை சந்தித்து ஒப்படைத்தனர். மனுக்கள் மீது இவர்கள்(தி.மு.க.) என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பது ஏற்கனவே நிரூபனம் ஆகி உள்ளது. இதுபோன்று மாயாஜாலங்கள் செய்வதால் மக்கள் ஏமாறமாட்டார்கள்.
வேலை கையில் எடுக்க வேண்டிய கட்டாயத்தையும், நிர்பந்தத்தையும் தி.மு.க.வுக்கு பா.ஜ.க. தந்து இருக்கிறது. ஆனாலும் அவர்களை மக்கள் நம்ப போவதில்லை. வாயினால் சொல்வதை வைத்து மக்கள் நம்பமாட்டார்கள். செயல்பாடு என்ன என்பதைத்தான் மக்கள் பார்ப்பார்கள். எனவே வேஷம் போட்டு மக்களை ஏமாற்றிவிடலாம் என தி.மு.க. கருதினால் அது நடக்காது. வேலை கையில் ஏந்த வேண்டிய நிர்பந்தத்திற்கு தி.மு.க. ஆளாகியிருப்பதை நினைத்து பா.ஜ.க. மகிழ்ச்சி அடைகிறது.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருக்கிறது. இந்த அரசாங்கத்தின் சார்பில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை(அதாவது இன்று) தொடங்க இருக்கிறது. ஜனாதிபதி உரையை 16 கட்சிகள் புறக்கணிப்பதால் எந்த வகையிலும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற முடியாது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த நிறைய நாட்கள் இருக்கின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. அங்கம் வகிக்கிறது. சட்டசபை தேர்தலிலும் கூட்டணி தொடருமா? என்ற சந்தேகம் பலருக்கு இருக்கலாம்.
கூட்டணியில் இருப்பதாக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் கூறிவிட்டனர். அதன்பிறகு பா.ஜ.க.வில் கலந்து பேசி முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என தெளிவாக கூறியிருக்கிறோம். நாங்கள் கல்யாணம்(கூட்டணி) செய்யலாம் என முடிவு செய்து இருக்கிறோம். நகை(தொகுதிகள்) எவ்வளவு என பேசி முடிவு செய்வோம். இதனால் கல்யாணம் நிற்காது. எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பா.ஜ.க. சட்டசபை தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இதற்கு மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமை தாங்கினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.ராமலிங்கம், மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்சதீஷ், நிர்வாகிகள் பாண்டித்துரை, மதிதுரைமுருகன், முரளிதரன், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story