சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் இ-சைக்கிள்கள் திட்டத்தை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி


சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் இ-சைக்கிள்கள் திட்டத்தை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 29 Jan 2021 7:59 AM IST (Updated: 29 Jan 2021 7:59 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சியின் சார்பில் சீர்மிகு நகர திட்ட நிதியின் கீழ் சென்னை காமராஜர் சாலையில், ‘இ-சைக்கிள்கள்' மற்றும் 'அடுத்த தலைமுறைக்கான சைக்கிள்கள்' திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை, 

'நம்ம சென்னை' அடையாள சிற்பத்தை தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சீர்மிகு நகர திட்ட நிதியின் கீழ் சென்னை காமராஜர் சாலையில், ‘இ-சைக்கிள்கள்' மற்றும் 'அடுத்த தலைமுறைக்கான சைக்கிள்கள்' திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

மோட்டார் வாகனம் அல்லாத போக்குவரத்து கொள்கையை ஊக்குவிக்கும் வகையில் மேலும் ஒரு மைல் கல்லாக சென்னை மாநகராட்சியின் சார்பில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 500 இ-சைக்கிள்கள், மற்றும் 500 அடுத்த தலைமுறைக்கான சைக்கிள்கள் என மொத்தம் 1,000 சைக்கிள்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தயார் நிலையில் உள்ளன.

இ-சைக்கிள்கள் குறைந்த மனித சக்தியில் மின்கலம் மூலம் அதிவேகமாக இயங்கும் திறன் உடையது. அடுத்த தலைமுறைக்கான சைக்கிள்கள் சக்கரங்கள் எளிதில் பழுதடையாத வகையிலும் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவில் அலுமினிய அலாய் தொழில் நுட்பத்தில் குறைந்த மனித சக்தியில் மிகவும் இலவகுவாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர்சிங், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story