புழல் அருகே பயங்கரம்: காதலிக்க மறுத்த பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயரை கத்தியால் குத்திய வாலிபர்


புழல் அருகே பயங்கரம்: காதலிக்க மறுத்த பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயரை கத்தியால் குத்திய வாலிபர்
x
தினத்தந்தி 29 Jan 2021 8:12 AM IST (Updated: 29 Jan 2021 8:12 AM IST)
t-max-icont-min-icon

காதலிக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர் பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்குன்றம், 

சென்னை அடுத்த புழல் புத்தகரத்தை சேர்ந்த 22 வயதுடைய பெண் என்ஜினீயரிங் பட்டதாரி அம்பத்தூரில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 26). இவர் ரெட்டேரி பகுதியில் செல்போன் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். சுதாகரும், அந்த பெண்ணும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுதாகரின் நடத்தை சரியில்லாததால், அவருடனான காதலை அப்பெண் முறித்து கொண்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சுதாகர் நேற்று காலை அந்த என்ஜினீயர் பெண் வீட்டிற்கு சென்று சென்றார். அப்போது அந்த பெண் வேலைக்கு செல்ல தயாராகி கொண்டிருந்த நிலையில், ‘ஏன் என்னை காதலிக்க மறுக்கிறாய்?’ என்றும் தன்னை தொடர்ந்து காதலிக்குமாறும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கத்திக்குத்து

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளம் பெண்ணின், வயிறு, கழுத்து, கை உள்ளிட்ட பகுதியில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த பெண் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்ட அங்கிருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த புழல் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய சுதாகரை தேடி வருகின்றனர். காதலிக்க மறுத்ததால் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story