தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ‘திடீர்’ உள்ளிருப்பு போராட்டம் ஒரத்தநாட்டில் பரபரப்பு


தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ‘திடீர்’ உள்ளிருப்பு போராட்டம் ஒரத்தநாட்டில் பரபரப்பு
x
தினத்தந்தி 29 Jan 2021 11:29 AM IST (Updated: 29 Jan 2021 11:29 AM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாடு தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ‘திடீர்’ உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

ஒரத்தநாடு, 

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் தொடர் மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் கணக்கெடுப்பு பணிகளை தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் நேற்று நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, பணித்தன்மை குறைவினை சுட்டிக்காட்டி சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் மீது குற்ற குறிப்பாணை வழங்கிடுமாறு உடனிருந்த ஒரத்தநாடு தாசில்தார் கணேஸ்வரனிடம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியதாக தெரிகிறது

உள்ளிருப்பு போராட்டம்

இதனைத் தொடர்ந்து தாசில்தார் கணேஸ்வரன் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு குற்ற குறிப்பாணை வழங்க நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கிராம நிர்வாக அலுவலர்கள், பயிர் சேத கணக்கெடுப்பு பணிக்கு முறையான சுற்றறிக்கை வழங்காமலும், சரியான வழிகாட்டுதல் இன்றியும், போதுமான கால அவகாசம் அளிக்காமலும் அவசர கதியில் கிராம நிர்வாக அலுவலர்கள் இரவு -பகலாக பணி செய்து வருவதாகவும், இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவருக்கு குற்ற குறிப்பாணை வழங்க முயற்சிக்கும் ஒரத்தநாடு தாசில்தாரை கண்டிப்பதாக கூறி கிராம நிர்வாக அலுவலர்கள் ஒரத்தநாடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர்களிடம் செல்போன் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கிராம நிர்வாக அலுவலர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story