எரிவாயு குழாய் பதிக்கும் பணி: குலையன்கரிசலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


எரிவாயு குழாய் பதிக்கும் பணி: குலையன்கரிசலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Jan 2021 7:50 PM IST (Updated: 29 Jan 2021 7:50 PM IST)
t-max-icont-min-icon

எரிவாயு குழாய் பதிக்கும் பணி குலையன்கரிசலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி:

எரிவாயு குழாய் பதிக்கும் பணி காரணமாக குலையன்கரிசலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எரிவாயு குழாய்

ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் வரை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்கு தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் மற்றும் விவசாயிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் விவசாயிகள் முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் விவசாயிகள் தங்களின் நிலங்களின் வழியே எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு இழப்பீடு பெற சம்மதம் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் 95 சதவீதம் பணிகள் முடிவடைந்து உள்ளன. ஆனால் அந்த நிறுவனம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விவசாய நிலங்களை சமப்படுத்தாமல் விட்டு சென்று உள்ளனர். இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் உடனடியாக நிலத்தை சமன்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி குலையன்கரிசல் பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Next Story