கடலூா் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூா் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூா்.
மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து வேலை பார்த்த செவிலியர்களுக்கு அரசு அறிவித்தபடி ஒரு மாத ஊக்க ஊதியமும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியர்களுக்கு நிவாரணம், உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணி பாதிப்பு இல்லாமல் தமிழகம் முழுவதும் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.
கருப்பு பட்டை அணிந்து போராட்டம்
அதன்படி நேற்று மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். கடலூரில் அரசு தலைமை மருத்துவமனையிலும் செவிலியர்கள், தொகுப்பூதிய செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பிரேமலதா தலைமை தாங்கினார். தலைவர் லதா, பொருளாளர் ஸ்டெல்லா மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 231 செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
400 பேர் பங்கேற்பு
இதேபோல் பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில் என மாவட்டத்தில் உள்ள 10 அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் செவிலியர்களும் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி மாவட்ட செயலாளர் பிரேமலதா கூறுகையில், மாநில சங்கம் அறிவுறுத்தலின் பேரில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் செவிலியர்கள், தொகுப்பூதிய செவிலியர்கள் 400-க்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளோம். அடுத்த கட்ட போராட்டம் பற்றி மாநில சங்கம் அறிவிக்கும் என்றார்.
Related Tags :
Next Story