நாட்டறம்பள்ளி- கள்ளக்காதல் விவகாரத்தால் பள்ளி ஆசிரியர் கொடூர கொலை


நாட்டறம்பள்ளி- கள்ளக்காதல் விவகாரத்தால் பள்ளி ஆசிரியர் கொடூர கொலை
x
தினத்தந்தி 29 Jan 2021 9:38 PM IST (Updated: 29 Jan 2021 9:38 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதல் விவகாரத்தால் பள்ளி ஆசிரியரை வாகனத்தில் கடத்தி சென்ற மர்மநபர்கள், அவரின் கை, கால்களை கட்டிப்போட்டு கொலை செய்து, முகத்தை சிதைத்துள்ளனர். பிணத்தை எடுத்துச் சென்று நாட்டறம்பள்ளி அருகே வீசி உள்ளனர்.

நாட்டறம்பள்ளி

கள்ளக்காதல் விவகாரத்தால் பள்ளி ஆசிரியரை வாகனத்தில் கடத்தி சென்ற மர்மநபர்கள், அவரின் கை, கால்களை கட்டிப்போட்டு கொலை செய்து, முகத்தை சிதைத்துள்ளனர். பிணத்தை எடுத்துச் சென்று நாட்டறம்பள்ளி அருகே வீசி உள்ளனர்.

போலீசுக்கு தகவல்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த பங்களாமேடு பகுதியில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக நாட்டறம்பள்ளி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாகக் கிடந்தவரின் முகம் சிதைக்கப்பட்டு இருந்தது.

கணித ஆசிரியர்

போலீஸ் விசாரணையில் அவர், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா சந்தூர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 33) எனத் தெரிய வந்தது. இளங்கலை பட்டதாரி ஆசிரியரான அவர், ஊத்தங்கரை அருகே ஜோதிநகர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

அவருக்கு, திருமணமாகி விக்டோரியா என்ற மனைவி, ஒரு மகளும், மகனும் உள்ளனர். விக்டோரியா போச்சம்பள்ளி பகுதியில் கணினி மையம் நடத்தி வருகிறார்.

கள்ளக்காதல் விவகாரம்

சிவக்குமாரை மர்மநபர்கள் யாரோ வாகனத்தில் கடத்தி சென்று கை, கால்களை கட்டிப்போட்டு அடித்துக் கொலை செய்து, முகத்தை சிதைத்துள்ளனர். அவரின் தலை மீது வாகனத்தை ஏற்றி நசுக்கி உள்ளனர்.
பின்னர் அவரின் உடலை, வாகனத்தில் எடுத்துச் சென்று, திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே பங்களாமேடு பகுதியில் சாலையோரம் வீசி விட்டுச் சென்றுள்ளனர். 

சிவக்குமார் கள்ளக்காதல் விவகாரத்தால் கொலை செய்யப்பட்டு இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும், நட்டறம்பள்ளி போலீசாரும், போச்சம்பள்ளி போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Next Story