தனியார் ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுத்த போது 8 மாத கர்ப்பிணி மூச்சு திணறி பலி - டாக்டர்களின் கவனக்குறைவால் இறந்ததாக கணவர் புகார்


தனியார் ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுத்த போது 8 மாத கர்ப்பிணி மூச்சு திணறி பலி - டாக்டர்களின் கவனக்குறைவால் இறந்ததாக கணவர் புகார்
x
தினத்தந்தி 30 Jan 2021 1:38 AM IST (Updated: 30 Jan 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

ஆவடி தனியார் ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுத்தபோது, 8 மாத கர்ப்பிணி மூச்சு திணறி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆவடி,

சென்னை ஆவடி காமராஜர் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 28). அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வைஷாலி (வயது 25). பி.காம் பட்டதாரி. இருவருக்கும் கடந்த ஆண்டு ஜனவரியில் திருமணம் நடந்தது.

வைஷாலி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனால் இவர் திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வைஷாலி உடல் பரிசோதனைக்காக அவரது தாயார் சரளா மற்றும் கணவருடன் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது அவருக்கு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. வைஷாலியின் கணவர் மற்றும் தாயார் சரளா ஆகியோர் வெளியில் நின்றிருந்தனர்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த டாக்டர்கள், வைஷாலிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு சுயநினைவின்றி மயங்கிய அவர், இறந்து விட்டதாக அவரது கணவர் தமிழ்மணியிடம் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்மணி கதறி அழுதபடி, திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்தில் மருத்துவமனையின் கவன குறைவால் தான் தனது மனைவி இறந்ததாக புகார் அளித்தார். புகாரின் பேரில், திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து வைஷாலி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வைஷாலிக்கும், தமிழ்மணிக்கும் திருமணமாகி 1 வருடம் மட்டுமே ஆவதால், திருவள்ளூர் ஆர்.டி.ஓ விசாரணை நடக்கிறது.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் கர்ப்பிணி பெண்ணின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். திருமணமான ஓரு வருடத்தில் இளம் கர்ப்பிணி பெண் தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக சென்று அங்கு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story