இலக்கை அடையும் வரை விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டும், ச.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் சரத்குமார் பேச்சு


இலக்கை அடையும் வரை விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டும், ச.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் சரத்குமார் பேச்சு
x
தினத்தந்தி 30 Jan 2021 3:16 AM IST (Updated: 30 Jan 2021 3:16 AM IST)
t-max-icont-min-icon

இலக்கை அடையும் வரை விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டும் என்று ச.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் சரத்குமார் பேசினார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மத்திய மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று சமயபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் சந்தியா அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். 

மத்திய மண்டல செயலாளர் சின்னசாமி வரவேற்றார். கூட்டத்தில் கட்சியின் தலைவர் சரத்குமார், கட்சியின் மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் சரத்குமார் பேசும்போது கூறியதாவது:-

நாம் இலக்கை அடையும் வரை விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டும். விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற நிலையை மாற்ற வேண்டும். அனைவருக்கும் சமத்துவம் கிடைக்க வேண்டும் என்பதே சமத்துவ மக்கள் கட்சியின் கொள்கையாகும்.

பணத்திற்காக வாக்களிப்பது, வாக்குகளை விற்பது என்பது ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்கு சமமாகும். கட்சி தொடங்கும் ஒவ்வொருவரும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைப்பது சகஜம்தான். என்னுடைய முன்னோர்கள் கே.டி.கே. தங்கமணி, ஆதித்தனார் போன்றவர்கள் மக்கள் பணியாற்றி பதவிக்கு வந்தார்கள். அவர்களைப் போன்று நாமும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்து வந்தால் ஒரு காலத்தில் நாமும் ஆட்சிக்கு வர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

திருச்சி ஜங்ஷன் ெரயில்வே மேம்பால பணியை விரைவாக முடிக்க வேண்டும். திருச்சி ஸ்மார்ட் சிட்டி வேலை மிகவும் தாமதமாக நடந்து வருகிறது. இதனை விரைவுபடுத்த வேண்டும். திருச்சி சத்திரம் பஸ்நிலையத்திற்கு கல்வி, ஆன்மிகம், விளையாட்டுத்துறைகளுக்கு அளப்பரிய சேவை செய்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பெயரை சூட்டுமாறு இக்கூட்டம் வேண்டிக்கொள்கிறது. 

மிகவும் பழுதடைந்து உள்ள திருச்சி மாநகராட்சி சாலைகளை போர்க்கால அடிப்படையில் செப்பனிட வேண்டும். மக்கள் தொகை அடர்த்தி கொண்ட முசிறி, துறையூரை இணைத்து புதிய மாவட்டம் உருவாக்க தமிழக அரசை வலியுறுத்துகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு அறிவித்து கிடப்பில்  உள்ள அரசு மருத்துவக்கல்லூரியை தொடங்க வேண்டும். துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story