234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் ; மு.க.ஸ்டாலின்
234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
ஆரணி
ஆரணியில் தி.மு.க. சார்பில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சேவூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே அமைக்கப்பட்ட அண்ணா, கலைஞர் அரங்கில் தி.மு.க. சார்பில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்னும் பொதுமக்களிடத்தில் கோரிக்கை மனுக்கள் பெறும் கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன் ஆகியோர் தலைமைதாங்கினர்.
கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
234 தொகுதியிலும்...
உங்கள் கோரிக்கை மனுவினை பெட்டியில் போட்டு இங்கு உங்கள் முன்பு சீல் வைக்கப்படுகிறது. இந்த பெட்டி வரும் தேர்தல் முடிந்த பிறகு திறக்கப்படும். நான் எதிர்பார்த்தது 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று. ஆனால் இப்போது இங்கே சொல்கிறேன் 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்பது உறுதியாகி விட்டது.
சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு தொகுதி வாரியாக, பேரூராட்சி, நகராட்சி, ஒன்றியங்கள் என தனித்தனியாக இந்த மனுக்கள் அடங்கிய பெட்டி திறக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அதற்குண்டான அதிகாரிகளைக் கொண்டு நிறைவேற்றுவேன். நான் கலைஞரின் மகன். வாய்ப்பு தந்தால் கண்டிப்பாக நிறைவேற்றித் தருவேன்.
ஆட்சியை பிடிப்போம்
நான் 50 ஆண்டு காலமாக அரசியலில் பயணித்து வந்துள்ளேன். 1971 தேர்தலில் 184 இடங்களை பிடித்து தி.மு.க. ஆட்சி அமைத்தது. அதேபோல வருகிற 2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்போம்.
ஆரணி, வந்தவாசி பகுதியில் உள்ள அரசு மருத்துவ மனைகளை தரம் உயர்த்துவதோடு, குடிநீர் பிரச்சினையை தீர்க்க நமது ஆட்சி அமைந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் எந்த துறையும் சரியாக செயல்படவில்லை. அனைத்திலுமே ஊழல் தான். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு நல்லதொரு வாய்ப்பு ஏற்படுத்தித் தாருங்கள். தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களில் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story