திருவண்ணாமலை, 2,031 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,031 இடங்களில் நாளை நடைபெறும் முகாம்களில் 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதிலும் 7814 பணியாளர்களுடன் 2031 முகாம்கள் மூலம் செயல்படவுள்ளது. இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 5 வயதிற்கு உட்பட்ட 2 லட்சத்து 19 ஆயிரத்து 952 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான பணியாளர்கள் முகாம் நடைபெறும் நாள் அன்று அந்தந்த முகாம்களிலேயே குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிப்பார்கள். மேலும் மறுநாள் முதல் பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு வீட்டிலேயே சொட்டு மருந்து அளிப்பார்கள்.
இந்த பணியில் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
முகாம்கள் மற்றும் வீடுகளில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதுடன் ரெயில் நிலையம், பஸ் நிலையம், திரையரங்குகள், தங்கும் விடுதிகள் போன்ற இடங்களிலும் "நடமாடும் முகாம்" மூலம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவை தவிர தொலை தூரத்தில் உள்ள எளிதில் செல்ல முடியாத இடங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு குழந்தை கூட விடுபடாது அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கொரானா காலம் என்பதால் போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வரும்போது முகக்கவசம் அணிந்து வருவதுடன் சமூக இடைவெளியும் அவசியம் கடைபிடிக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து போலியோ நோயினை ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story