பவானி அருகே மில்லில் பயங்கர தீ விபத்து


பவானி அருகே மில்லில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 30 Jan 2021 9:44 PM IST (Updated: 30 Jan 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

பவானி அருகே துணி அரவை மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு மற்றும் எந்திரங்கள் எரிந்து நாசம் ஆனது.

ஈரோடு,

ஈரோடு அருகே உள்ள குமிளாம்பரப்பு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் பவானியை அடுத்த சித்தோடு அருகே உள்ள பச்சைப்பாளி மேடு பகுதியில் துணி அரவை மில் வைத்து உள்ளார். 

கோவை, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் பனியன் மற்றும் டீ சர்ட்டுகள் உற்பத்தி செய்தது போக மீதம் உள்ள கழிவு துணிகள் மறு சுழற்சி மூலம் சுத்திகரிக்கப்பட்டு இந்த மில்லுக்கு கொண்டு வரப்படுகின்றன. அவ்வாறு கொண்டுவரப்பட்ட கழிவு துணிகள் இங்குள்ள எந்திரங்கள் மூலம் பஞ்சாக மாற்றப்படுகின்றன. பின்னர் இந்த பஞ்சு மீண்டும் பனியன் தயாரிக்க தேவையான நூல்களாக தயாரிக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் நேற்று அதிகாலை மில்லில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 
அப்போது மில்லின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்துள்ளது. பின்னர் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. உடனே இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவல் அறிந்ததும் பவானி தீயணைப்பு நிலைய அதிகாரி காந்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு மற்றும் எந்திரங்கள் எரிந்து நாசம் ஆனதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.  இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story