செங்கோட்டை-திருச்சி இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும்


செங்கோட்டை-திருச்சி இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும்
x
தினத்தந்தி 30 Jan 2021 10:12 PM IST (Updated: 30 Jan 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை - திருச்சி இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும் தென்னக ரெயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிவகாசி,


செங்கோட்டை - மதுரை இடையே தினமும் 6 பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.. கொரோனா பரவல் காரணமாக இந்த ரெயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

 தற்போது வரை இந்த பயணிகள் ரெயில்கள் ஏதும் மீண்டும் இயக்கப்படவில்லை. விரைவில் பயணிகள் ரெயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தாலும் பழையப்படி 6 ரெயில்கள் இயக்கப்படாது என்று கூறப்படுகிறது. 

செங்கோட்டையில் இருந்து ஒரு ரெயிலும், மதுரையில் இருந்து ஒரு ரெயிலும் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.  இவ்வாறு ரெயில்களின் எண்ணிக்கையை குறைத்தால் இந்த வழித்தடத்தில் உள்ள கிராம மக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி பஸ் மற்றும் தனியார் வாகனங்களில் சென்று வர வேண்டிய நிலை ஏற்படும். எனவே இந்த வழித்தடத்தில் ஏற்கனவே இயக்கப்பட்ட 6 ரெயில்களை மீண்டும் இயக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இதுகுறித்து சிவகாசி நகர்மன்ற முன்னாள் தலைவர் சபையர் ஞானசேகரன், தென்னக ரெயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவுக்கு முன்னர் வரை காலை 8.30 மணிக்கும், மதியம் 1.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் மதுரையில் இருந்து சிவகாசிக்கு பயணிகள் ரெயில்கள் வரும். 

அதேபோல் செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரெயில்கள் காலை 9 மணிக்கும், மதியம் 2 மணிக்கும், மாலை 5 மணிக்கும் சிவகாசிக்கு வந்தது. 
மாலை 5 மணிக்கு பின்னர் இரவு 8 மணி வரை பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்காக காத்திருந்து பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. அந்த ரெயில் சென்னை வரை செல்வதால் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். 
இதனால் இடையில் உள்ள ஊர்களில் இருந்து பொதுமக்கள் செல்ல மிகவும் சிரமமாக இருந்தது. 

இதனால் செங்கோட்டை-திருச்சி இடையே ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கினால் பயணிகள் ரெயில் மற்றும் பொதிகை ரெயில்கள் இயக்கப்படாத நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்கினால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே செங்கோட்டை-திருச்சி இடையே ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும். 

அதேபோல் விழுப்புரத்தில் இருந்து மதுரை வரை புதிதாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும். 
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story