கயத்தாறில் காய்ச்சலுக்கு குழந்தை பலி: தனியாா் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
காய்ச்சலுக்கு குழந்தை பலியானதால், கயத்தாறு தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கயத்தாறு,
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கொல்லங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வெயிலாட்சி. இவர்களுடைய மகன் மகிழரசனுக்கு (வயது 1½) கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது.
உடனே அவனை கயத்தாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் மகிழரசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து அவனது உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.
தனியார் ஆஸ்பத்திரி முற்றுகை
இதற்கிடையே கயத்தாறு தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் சரியாக சிகிச்சை அளிக்காததால்தான் மகிழரசன் இறந்ததாக கூறி, அவனது பெற்றோர் நேற்று கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். பின்னர் அவர்கள், உறவினர்களுடன் கயத்தாறு தனியார் ஆஸ்பத்திரியின் முன்பு அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். புதிய தமிழகம் கட்சியினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story