போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடியுங்கள்; சாலைவிபத்துகளை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்; சென்னை போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்


சென்னையில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி உருவாக்கப்பட்ட கடற்கரை மணல் சிற்பத்தை படத்தில் காணலாம்.
x
சென்னையில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி உருவாக்கப்பட்ட கடற்கரை மணல் சிற்பத்தை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 31 Jan 2021 2:02 AM IST (Updated: 31 Jan 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்து, சாலைவிபத்துகளை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விழிப்புணர்வு
32-வது சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் போக்குவரத்து போலீசாரின் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு பேரணி நேற்று மாலை நடைபெற்றது. இதனை சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சாலை பாதுகாப்பை வலியுறுத்தி உருவாக்கப்பட்ட கடற்கரை மணல்சிற்பத்தை திறந்து வைத்துபார்வையிட்டார். பாடகர் கானா பாலா பாடிய போக்குவரத்து விழிப்புணர்வு இசை குறுந்தகட்டையும் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேசியதாவது:-

சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் தொடர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

பொதுமக்கள் ஒத்துழைப்பு
சென்னையில் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், சாலை விபத்துகள், 30 சதவீதம் குறைந்துள்ளது. சாலை விபத்துகளால் உயிரிழப்பு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு, சாலை விதிகளை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஹெல்மெட் அணிதல், சிக்னல்களை மதித்தல், சீல் பெல்ட் அணிதல் போன்ற போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல் போன்ற செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும். சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக போலீஸ் எடுத்து வருகிறது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. சாலை விபத்துகளை குறைக்க, போலீசாருடன் இணைந்து பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story