அரசியல்வாதிகளின் ‘டிஜிட்டல்' பண பரிவர்த்தனையை கண்காணிக்க குழு அமைப்பு- தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
அரசியல்வாதிகளின் ‘டிஜிட்டல்’ பணபரிவர்த்தனையை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
திருச்சி அருகே பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியில் சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 20 மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான 4 நாட்கள் பயிற்சி முகாம் கடந்த 27-ந் தேதி தொடங்கியது. திருச்சி, கரூர், திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், சேலம், ஈரோடு, அரியலூர், திண்டுக்கல், பெரம்பலூர், விருதுநகர், மதுரை உள்ளிட்ட 20 மாவட்டங்களைச் சேர்ந்த 118 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்தியதேர்தல் ஆணையம் பிரத்தியேக பயிற்சி பெற்ற 8 பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் எவ்வாறு நடைமுறை படுத்துவது? என்பது குறித்தும், வாக்குப்பதிவு எந்திரத்தை கையாள்வது குறித்தும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும், தேர்தல் சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.நேற்றுடன் பயிற்சி நிறைவு பெற்றது.
இதை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பயிற்சியாளர்கள் எவ்வாறு பயிற்சி அளிக்கிறார்கள் என்பதை அவர் உன்னிப்பாக கவனித்தார். பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் அவர், தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது? என கலந்துரையாடினார். அவருடன் திருச்சி மாவட்ட கலெக்டரும,் தேர்தல் அலுவலருமான சிவராசும் பங்கேற்றார்.
அதைத்தொடர்ந்து சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா பரவல் காரணமாக வாக்குச்சாவடிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எவ்வளவு பேர் பயன்படுத்த வேண்டும்? என மாவட்ட தேர்தல் அலுவலர் பட்டியல் தயாரித்து முடிவு செய்வார்.
தமிழகத்தில் மே 24-ந் தேதியுடன் 5 ஆண்டுகால சட்டசபை முடிகிறது. அதற்கேற்ப தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தும் யோசனை தேர்தல் ஆணையத்திற்கு இல்லை. தற்போது 26 மாவட்டங்களில் முதல் கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சரிபார்க்கும் பணி முடிந்து விட்டது. இதர மாவட்டங்களில் வருகிற 5-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்த எவ்வித தடையும் இல்லை. ஆனாலும், பிரசாரம் தொடர்பாக சில புகார்கள் வந்துள்ளன. அதன்மீது இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக அரசியல்வாதிகள் ‘டிஜிட்டல்’ முறையில் பணம் பரிவர்த்தனை செய்வதை கண்காணிக்க மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வருமானவரித்துறை, சுங்கத்துறை, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, வங்கி மூத்த அதிகாரிகள் அக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் வழிகாட்டுதல்படி டிஜிட்டல் பணபரிமாற்றம் நடப்பதை தீவிரமாக கண்காணிப்பார்கள்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள், அவர்கள் எந்த ஊரில் இருக்கிறார்களோ, அங்கு பாஸ்போர்ட் ஆதாரமாக வைத்து வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தேர்தல் ஆணையத்திடம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்திட வேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேர்தல் ஆணையம் அதை பரிசீலனையில் வைத்துள்ளது. இறுதி முடிவை இந்திய தேர்தல் ஆணையமே எடுக்கும். பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்புவரை வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்யலாம். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் ஓட்டுப்போடலாம். இது கட்டாயம் கிடையாது. வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்கலாம்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தேசிய அளவிலும், மாநில அளவிலும் உள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சிகளும் உள்ளன. தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 10 உள்ளன. தேர்தலின்போது கொரோனா விதிகளை கடைப்பிடிக்கவும், சமூக விலகலை கடைப்பிடிக்கவும், முக கவசம் அணியவும், சானிடைசர் பயன்படுத்தவும், மின்னணு எந்திரத்தில் வாக்குப்பதிவு செய்யும்போது கையில் கிளவுஸ் அணிந்திட வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதுபோல அரசியல் கட்சியினரும் கொரோனா விதிகளை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story