டி.என்.பாளையம், கடம்பூர் பகுதியில் தோட்டங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்; வாழைகள்-மக்காச்சோள மூட்டைகள் சேதம்


டி.என்.பாளையம், கடம்பூர் பகுதியில் தோட்டங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்; வாழைகள்-மக்காச்சோள மூட்டைகள் சேதம்
x
தினத்தந்தி 31 Jan 2021 10:44 PM GMT (Updated: 31 Jan 2021 10:44 PM GMT)

டி.என்.பாளையம், கடம்பூர் பகுதியில் தோட்டங்களுக்குள் புகுந்த யானைகள் வாழைகள், மக்காச்சோள மூட்டைகளை சேதப்படுத்தின.

டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் கணக்கம்பாளையம் அருகே உள்ள சுண்டக்கரடு பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. விவசாயி. டி.என்.பாளையம் வனப்பகுதியையொட்டி உள்ள இவரது தோட்டத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் வாழைகளை சாகுபடி செய்திருந்தார். இவை நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் யானைகள் வெளியேறின. பின்னர் இந்த யானைகள் தட்சிணாமூர்த்தியின் தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை நாசப்படுத்த தொடங்கின.
வாழைகள் சேதம்
சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த தட்சிணாமூர்த்தி திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் தோட்டத்துக்கு சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். அதைத்தொடர்ந்து அவர் மற்ற விவசாயிகளை ஒன்று திரட்டி யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் யானைகள் காட்டுக்குள் செல்லாமல் வாழைகளை சேதப்படுத்தின. இதில் 100-க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன. சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு நேற்று அதிகாலை 4 மணி அளவில் யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன.
இதுபற்றி அறிந்ததும் டி.என்.பாளையம் வனத்துறையினர் அங்கு சென்று சேதமடைந்த வாழைகளை பார்வையிட்டு, யானைகள் தோட்டங்களுக்குள் புகுவதை தடுக்க ேராந்து பணியில் ஈடுபட உள்ளோம் என்று தெரிவித்தனர்.

விவசாயிகள்
விவசாயிகள் வனத்துறையிடம் கூறும்போது, ‘வனவிலங்குகளை விரட்டச்செல்லும் விவசாயிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. வனவிலங்குகள் அடிக்கடி மனிதர்களை தாக்கி வருகின்றன.
வனத்தையொட்டியுள்ள பகுதிகளில் ஆழமாக அகழி வெட்டி பராமரிக்க வேண்டும் அல்லது மின்வேலி அமைத்து வனவிலங்குகள் தோட்டங்களுக்குள் புகுவதை தடுக்கவேண்டும். மேலும் வனவிலங்குகளினால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பீடுகளை வனத்துறையினர் வழங்கவேண்டும்’ என்றனர்.

மற்றொரு சம்பவம்
கடம்பூர் அருகே உள்ள சுஜில் கரையை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் தனது நிலத்தில் அறுவடை செய்த மக்காச்சோளத்தை மூட்டைகளில் கோட்டமாளம் பகுதியில் உள்ள களத்தில் அடுக்கி வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை வெளியேறியது. பின்னர் இந்த யானை கோட்டமாளத்துக்கு சென்று அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மக்காச்சோளத்தை தின்றும், மிதித்தும் மூட்டைகளை நாசப்படுத்தின. சத்தம் கேட்டு விவசாயிகள் அங்கு சென்று தீப்பந்தம் காட்டியும், டிராக்டரில் ஒலி எழுப்பியும் யானையை துரத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானை காட்டுக்குள் செல்லாமல் மக்காச்சோள   மூட்டைகளை நாசப்படுத்தியது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் வனப்பகுதிக்குள் சென்றது.

Next Story