திருச்சி மாவட்டத்தில் 2 லட்சத்து 62 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து


திருச்சி மாவட்டத்தில் 2 லட்சத்து 62 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
x
தினத்தந்தி 1 Feb 2021 12:01 AM GMT (Updated: 1 Feb 2021 12:03 AM GMT)

திருச்சி மாவட்டத்தில் 2 லட்சத்து 62 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

திருச்சி,

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல் படி நேற்று திருச்சி மாவட்டத்தில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய் தடுப்பிற்கான சொட்டு மருந்துகள் வழங்கும் முகாம் நடைபெற்றது. திருச்சி பெரிய மிளகுபாறையில் அமைக்கப்பட்டிருந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தனர். 

மாவட்டம் முழுவதும் நேற்று மொத்தம் 2 லட்சத்து 62 ஆயிரத்து 222 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதற்காக மாவட்டம் முழுவதும் 1,569 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
இதுதவிர திருச்சி மத்திய பஸ்நிலையம், ஜங்ஷன் ரெயில் நிலையம், விமானநிலையம், முக்கொம்பு உள்ளிட்ட சுற்றுலா தலங்கள், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகளிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் விமானத்தில் பயணம் செய்யும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. 

உப்பிலியபுரம் வட்டாரத்தில் மருத்துவ அலுவலர் மணிமேகலை தலைமையில், மருத்துவர் மதுசூதனன் மேற்பார்வையில் 86 இடங்களில் போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெற்றது. முசிறியில் நடந்த முகாமை எம்.செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முசிறி வட்டத்தில் 117 இடங்களில் 12, 269 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் 452 பேர் ஈடுபட்டனர். காலை முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் மையங்களுக்கு அழைத்துவந்து போலியோ சொட்டு மருந்து கொடுத்துச்சென்றனர்.

மண்ணச்சநல்லூர் வட்டாரத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவில், சமயபுரம் சுங்கச்சாவடி உள்பட 134 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமை எம்.பரமேஸ்வரி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். சுமார் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. 

Next Story