போலியோ சொட்டு மருந்து முகாம்: எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு


போலியோ சொட்டு மருந்து முகாம்: எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு
x
தினத்தந்தி 1 Feb 2021 2:47 AM GMT (Updated: 1 Feb 2021 2:47 AM GMT)

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியிலும் நேரில் சென்று பார்வையிட்டார்.

சென்னை, 

தமிழகம் முழுவதும் நேற்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. அந்த வகையில் நேற்று 43 ஆயிரத்து 51 மையங்களில் 5 வயதுக்குட்பட்ட 70 லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 7 மணிக்கு அந்தந்த பகுதிகளில் தொடங்கிய முகாமுக்கு, பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து சென்று சொட்டு மருந்தை குழந்தைகளுக்கு போட்டு கொண்டனர்.

சென்னையில் அரசு மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், சமுதாய நலக்கூடங்கள் உள்பட 1,644 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைகளில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் கடந்த 17 ஆண்டுகளாக யாரும் போலியோவால் பாதிக்கப்படவில்லை. போலியோ நோய் பாதிப்பு இல்லை என்றாலும், நாம் அனைவரும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி

தமிழகம் முழுவதும் 1, 82, 145 அரசு பணியாளர்கள், தன்னார்வலர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 6 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயித்தோம். தமிழகத்தில் தற்போது வரை 1.05 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதற்காக பல துறைகளில் முன்கள பணியாளர்களை கணக்கெடுத்துள்ளோம். இந்த கணக்கெடுப்பை முடிக்க பிப்ரவரி 5-ந்தேதி வரை மத்திய அரசிடம் கால அவகாசம் கேட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் எழிலரசி, ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீன் டாக்டர் பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story