அரசலூர் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


அரசலூர் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 1 Feb 2021 7:06 PM GMT (Updated: 1 Feb 2021 7:06 PM GMT)

அரசலூர் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராம மக்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்,

10 மாதங்களுக்கு பிறகு...
பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெற்று வந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்து நடைபெறவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வந்ததோடு, கலெக்டர் அலுவலகம் முன்பு மனுக்கள் போட பெட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல்-அமைச்சர் அறிவிப்பை தொடர்ந்து, 10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை 10 மணியளவில் கலெக்டர் (பொறுப்பு) ராஜேந்திரன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்ததால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்களையும், அவர்கள் கொண்டு வந்த உடைமைகளையும் சோதனை செய்தும், முககவசம் அணிந்து வந்தவர்களை மட்டும் போலீசார் கலெக்டர் அலுவலகத்துக்கு உள்ளே அனுமதித்தனர். மேலும் அவர்களுக்கு கைகளை கழுவி சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. கூட்டத்தில் பொதுமக்களை அதிகாரிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வைத்து, கலெக்டரிடம் மனு அளிக்க செய்தனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
இந்நிலையில் வேப்பந்தட்டை தாலுகா அரசலூர் கிராம மக்கள், நடிகர் விஜய் ரசிகர்கள் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.
அதில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பச்சமலை அடிவாரத்தில் உள்ள அரசலூர் ஏரியின் பரப்பளவு 140 ஏக்கர் ஆகும். ஆனால் தற்போது அந்த ஏரியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு தனியார்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. பரப்பளவு குறைந்ததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் நிரம்பிய அரசலூர் ஏரி, ஆக்கிரமிப்பினால் கரை உடைந்து ஏரியின் தண்ணீர் வீணாகி விளை நிலங்கள் நாசாமாயின. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசலூர் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதன் முழு பரப்பளவில் தண்ணீர் தேக்குவதற்கு, அதனை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
வாய்க்காலை தூர்வார வேண்டும்
இதேபோல் லாடபுரம் கிழக்கு ஏரியின் பாசன விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கொடுத்த மனுவில், லாடபுரம் மேற்கு ஏரியில் இருந்து கிழக்கு ஏரிக்கு பெரியசாமி வாய்க்கால் வழியாக தண்ணீர் வரும். லாடபுரம் கிழக்கு ஏரி நிரம்பினால் லாடபுரம், குரும்பலூர், புது ஆத்தூர், அம்மாபாளையம், மேலப்புலியூர், களரம்பட்டி, பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசனம் பெறும். 40 அடி அகலம் கொண்ட பெரியசாமி வாய்க்கால் ஆக்கிரமிப்பால் தற்போது 3 அடி அகலமாக மாறியதால் கடந்த 5 ஆண்டுகளாக லாடபுரம் கிழக்கு ஏரிக்கு தண்ணீர் வருவதில்லை. இதையடுத்து அதிகாரிகளின் நடவடிக்கையால் பெரியாசாமி வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, எல்லைக் கல் நடப்பட்டது.
ஆனால் பொதுப்பணித்துறையினரால் வாய்க்காலில் குடிமராமத்து பணிகள் தடைபட்டது. பின்னர் பாசன விவசாயிகளால் ரூ.10 லட்சம் திரட்டப்பட்டு, அதன் மூலம் வாய்க்காலில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு, லாடபுரம் கிழக்கு ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் பெரியசாமி வாய்க்கால் ஆக்கிரமிப்பில் சிக்கியதால், அதன் வழியாக தண்ணீர் வருவதில்லை. எனவே வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி லாடபுரம் மேற்கு ஏரியில் இருந்து, கிழக்கு ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
169 மனுக்கள் பெறப்பட்டன
வேப்பந்தட்டை தாலுகா விசுவக்குடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முஹம்மது ஜகரிய்யா, அந்த கிராம மக்கள் சார்பாக கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே உள்ள ஏரியினுள், குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக கிணறு ஒன்று அமைக்கப்பட்டு, அதற்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது. தற்போது பெய்த மழையின் காரணமாக ஏரி நிரம்பி, அதனுள் இருந்த கிணறு முழுவதுமாக நீரில் மூழ்கி மறைந்து போனது. எனவே சுற்றுச்சுவரை உயர்த்தி கட்டி, கிணற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஏரியில் விரிசல் ஏற்பட்ட பகுதிகளை சீரமமைக்க வேண்டும், என்றும் கூறியிருந்தார். மேலும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 169 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

Next Story