மத்திய பட்ஜெட் குறித்து பொதுமக்கள் ஆதரவும், எதிரிப்பும்


மத்திய பட்ஜெட் குறித்து பொதுமக்கள் ஆதரவும், எதிரிப்பும்
x
தினத்தந்தி 1 Feb 2021 7:07 PM GMT (Updated: 1 Feb 2021 7:09 PM GMT)

மத்திய பட்ஜெட் குறித்து கரூர் மாவட்ட பொதுமக்கள் ஆதரவும், எதிரிப்பும் தெரிவித்துள்ளனர்.

கரூர்

2021-22-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்தரி நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து பட்ஜெட் குறித்து கரூர் மாவட்ட பொதுமக்களின் கருத்து விவரம் பின்வருமாறு:-
கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர் ஸ்டிபன்பாபு:- சிறு, குறு தொழிலுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது ஜவுளி சார்ந்த தொழிலுக்காகவா, உள்ளநாட்டு ஏற்றுமதியாளர்களுக்கா அல்லது வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வர்களுக்காகவா என்பதை தெளிவாக இல்லை. ஏற்கனவே கடந்த பட்ஜெட்டில் ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கினார்கள். அதன் நிலுவையே இன்றும் வரவில்லை. தற்போது ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளதை எதன் அடிப்படையில் வழங்குவார்கள் என்பதை விளக்க வேண்டும்.

வரவேற்கத்தக்கது

கரூர் காவிரி நீர் பாசன விவசாயிகள் சங்க தலைவரும், விவசாயியுமான ராஜாராம்:- மத்திய பட்ஜெட்டில் அரசு துறையில் தனியார் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முக்கியதுவம் அளிக்கப்பட வில்லை. உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் ஊக்கப்படுத்த படவில்லை.

தனியாருக்கு வழங்க கூடாது

குளித்தலை பகுதியை சேர்ந்த கணினி பொறியாளர் சுதர்சன்:- 
நமது நாட்டில் உள்ள அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட அனைவரும் செலுத்தும் பல வகையான வரிகள் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. அவ்வாறு பெரும் வரிகளைக் கொண்டு ஒரு அரசு நாட்டை வழிநடத்த முடியாது என்றால், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்கும்போது அவர்கள் எவ்வாறு அந்தத் துறையை நஷ்டமின்றி செயல்படுத்த முடியும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு மாற்றப்படும்போது அரசுக்கு மட்டுமல்லாது தனியார் கூறும் அதிகப்படியான வரியையும் சேர்த்து நாட்டு மக்கள் 2 வரிகள் கட்ட வேண்டிய நிலை ஏற்படக்கூடும். எனவே பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்க கூடாது. என்றார்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றங்கள்

வெள்ளியணையை ேசர்ந்த வர்த்த சங்க தலைவர் ஆறுமுகம்:- மத்திய பட்ஜெட்டில் வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் உள்ள சில அம்சங்களை வரவேற்கிறேன். ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு பொருட்களின் விலை, பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் சாலை விரிவாக்கத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது வர்த்தகத்திற்கு பெரிதும் பயன்படும்.

வேளாண் உற்பத்தி

வெள்ளியணை வழியாம்புதூரை சேர்ந்த் விவசாயி ஆனந்தகுமார்:-
மத்திய பட்ஜெட்டில் புயல், மழை மற்றும் வறட்சியின் போது பாதிப்பு ஏற்பட்டால் கொடுக்கப்படும் இழப்பீடு போதுமானதாக இல்லை. விவசாயி விளைவித்த பொருட்களை கொண்டு செல்ல கிசான் ெரயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டை பொருத்தவரை மிகப்பெரிய அளவில் விவசாயம் செய்து விளைவித்த பொருட்களை வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு செல்லும் நிலையில் இல்லை. இங்கு இருப்பவர்கள் எல்லாம் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளே. இதேபோல் வேளாண் உற்பத்தியின் ஒரு பகுதியாக சூரிய மின் உற்பத்தி செய்யப்படும் என கூறியிருப்பது, விவசாயம் செய்யப்படும் நிலங்களில் பாதிப்பு ஏற்படாதவாறு இருக்க வேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க அதிக அளவில் நிதி ஒதுக்கி இருக்கலாம்.

சிலிண்டர் விலையை குறைத்திருக்கலாம்

வெள்ளியணை அருகே உள்ள காணியாளம்பட்டியை சேர்ந்த குடும்ப தலைவி கவிதா:-
தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தி இருப்பதால் அதன் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இது என்னை போன்று பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர்களுக்கு மேலும் கவலையளிக்கிறது. தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை இல்லாமல் இந்த பட்ஜெட்டின் மூலம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏறி, குடும்பத்தின் செலவு அதிகரிக்கும். சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த வயது வரம்பை 60-ஆக குறைத்திருக்கலாம்.

Next Story