மத்திய பட்ஜெட் குறித்து நெல்லை, தென்காசி மக்கள் கருத்து


மத்திய பட்ஜெட் குறித்து நெல்லை, தென்காசி மக்கள் கருத்து
x
தினத்தந்தி 2 Feb 2021 12:37 AM GMT (Updated: 2 Feb 2021 12:37 AM GMT)

மத்திய பட்ஜெட் குறித்து நெல்லை, தென்காசியை சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

பாராட்டுக்குரியது
மத்திய அரசின் பொது பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்  தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து நெல்லையை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
ரெயில்வே பயணிகள் நலச்சங்க பொதுச் செயலாளர் அப்பாத்துரை:- மத்திய பட்ஜெட்டில் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது பாராட்டுக்குரியது. எல்.ஐ.சி.யின் பங்குகளை 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக தனியாருக்கு விற்பனை செய்வது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை குறைக்கும். ெரயில்வே பாதைகளை 2023-ம் ஆண்டுக்குள் முழுமையாக மின்மயமாக்கல் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.

விலைவாசி உயரும்
நெல்லை மாநகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் குணசேகரன்:- மத்திய பட்ஜெட் அத்தியாயவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். வணிகர்கள் சார்பில் பல்வேறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் அதுபோன்று எந்த அறிவிப்பும் வரவில்லை. பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

ஏமாற்றம் 
பேட்டையை சேர்ந்த இல்லத்தரசி அன்னபுஷ்பம்:- மத்திய பட்ஜெட் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உள்ளது. கொரோனாவை தடுக்கவும், அது சார்ந்த சுகாதார பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் தனிப்பட்ட முறையில் திட்டங்கள் அறிவிக்காமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

அஞ்சல் துறை ஓய்வூதியர் சங்க நிதிக்குழு துணைத்தலைவர் அமிர்தராஜ்:- பொதுத்துறை நிறுவனங்கள் சேவை செய்வதை தவிர்த்து விட்டு வணிக நோக்கில் செயல்படும் வகையில் பட்ஜெட் போடப்பட்டுள்ளது. முதலாளித்துவத்துக்கு ஆதரவாக அமைந்துள்ளது. 75 வயதுக்கு மேல் வருமானவரி சலுகை அளிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. அந்த வயதை 70 ஆக குறைக்க வேண்டும். வருமானவரி உச்சவரம்பு உயர்த்தப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது
.
மோசமான விளைவு 
நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்க செயலாளர் மோகன்:- மத்திய பட்ஜெட் முறைசாரா தொழிலாளர்களை நசுக்குகிறது. கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் உள்ள பணத்தை மத்திய அரசு எடுக்காமல் விட்டால் அந்த பணத்தை கொண்டு பல்வேறு உதவிகளை செய்யலாம். ஆனால் மத்திய அரசு முறைசாரா தொழிலாளர்கள் நிதியத்தை மூடிவிட்டு நேரடியாக சலுகை அறிவிப்பதாக கூறி உள்ளது. இது தொழிலாளர்களை ஏமாற்றும் வேலை ஆகும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான வரிச்சலுகைகளை அறிவித்து இருப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

தென்காசி
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

ஆடிட்டர் நாராயணன்:- இன்றைய கொரோனா சூழ்நிலையில் மத்திய பட்ஜெட் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பட்ஜெட்டாக உள்ளது. அதற்காக பட்ஜெட்டில் வரிமாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க பட்ஜெட். 
மர வியாபாரி ராஜா ஜெயபால்:- சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையை மீட்டெடுக்க அரசு தரப்பில் இருந்து அவசர கால கடன் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் சிறு, குறு தொழில் முனைவோராக பதிவு செய்துள்ளவர்கள், தனிநபர் முதலாளிகள், கூட்டு நிறுவனங்கள், பதிவு செய்த நிறுவனங்கள், அறக்கட்டளைகள், அளவான கடன் கொண்ட கூட்டு நிறுவனங்கள், முத்ரா திட்டத்தின் கீழ் இணைந்திருப்பவர்கள் போன்றோர் கடன் வாங்கலாம் என்ற வரையறை இணைக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து தற்போது மத்திய பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கக்கூடியது. 

எதுவும் இல்லை
ஜவுளிக்கடை அதிபர் எஸ்.எம்.கமால் முகைதீன்:- தனிநபர் வருமான வரியில் வியாபாரிகள் சலுகைகளை எதிர்பார்த்தனர். ஆனால் எந்த சலுகையும் வியாபாரிகளுக்கு அளிக்காததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். பட்ஜெட்டில் குறிப்பிட்டு சொல்லும்படி எதுவுமில்லை. கஷ்டமான சூழ்நிலையில் உள்ள சிறு வியாபாரிகளுக்கு ஆதரவாக பட்ஜெட்டில் எதுவும் இல்லை. 

Next Story