அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 7 பேர் காயம் மாடு குறுக்கே வந்ததால் நிலைத்தடுமாறி விபரீதம்


அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 7 பேர் காயம் மாடு குறுக்கே வந்ததால் நிலைத்தடுமாறி விபரீதம்
x
தினத்தந்தி 2 Feb 2021 3:11 AM GMT (Updated: 2 Feb 2021 3:11 AM GMT)

அச்சரப்பாக்கம் அருகே மாடு குறுக்கே வந்ததால் நிலைத்தடுமாறிய அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 7 பேர் காயமடைந்தனர்.

அச்சரப்பாக்கம், 

புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மார்க்கமாக தமிழ்நாடு அரசு பஸ் (தடம் எண் 87) நேற்று காலை சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த கடமலைப்புத்தூர் அருகே சென்ற போது, சாலையின் குறுக்கே திடீரென மாடு ஒன்று வந்ததால், நிலைத்தடுமாறிய பஸ் டிரைவர் அதன் மீது மோதாமல் இருக்க பஸ்சை ஓரமாக திருப்ப முயன்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக பஸ் தட்டுத்தடுமாறி சென்று அருகிலிருந்த பள்ளத்தில் இறங்கியதில், சாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் ‘அய்யோ... அம்மா’... என்று அலறினர்.

7 பேர் காயம்

இந்த விபத்தை சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு அதிர்ச்சியடைந்து ஓடிவந்து அவர்களை பஸ்சிலிருந்து பத்திரமாக மீட்டனர். இதில் அரசு பஸ்சில் பயணம் செய்த 7 பேர் காயமடைந்தனர். இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த பயணிகள் 6 பேரை மதுராந்தகம் அரசு மருத்துவமனையிலும், ஒருவரை மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.எஸ்.சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story