ரேஷன் கடையில் பொருட்களை முறையாக வினியோகிக்க கோரி வட்ட வழங்கல் தாசில்தாரை பெண்கள் முற்றுகை


ரேஷன் கடையில் பொருட்களை முறையாக வினியோகிக்க கோரி வட்ட வழங்கல் தாசில்தாரை பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 2 Feb 2021 10:26 PM GMT (Updated: 2 Feb 2021 10:26 PM GMT)

ரேஷன் கடையில் பொருட்களை முறையாக வினியோகம் செய்யக்கோரி வட்ட வழங்கல் தாசில்தாரை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பவானி, 

பவானி நகராட்சியில் 10-வது வார்டுக்கு உள்பட்ட பகுதி பழனிபுரம். இந்த பகுதியில் ஒரு ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு ரேஷன் பொருட்கள் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.  இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டு நேற்று பவானியில் உள்ள வட்ட வழங்கல் தாசில்தார் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு பணியில் இருந்த வட்ட வழங்கல் தாசில்தார் சரவணனை முற்றுகையிட்டனர். 

இதைத்தொடர்ந்து பெண்களிடம் தாசில்தார் சரவணன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பெண்கள் கூறுகையில், ‘பழனிபுரத்தில் உள்ள 2-ம் எண் ரேஷன் கடையில் எங்களுக்கு முறையாக பொருட்கள் வினியோகம் செய்வதில்லை. பொருட்கள் வாங்க சென்றால் கை ரேகை கருவியில் பதிவு ஆகவில்லை என கூறி திருப்பி அனுப்பி விடுகிறார்கள். ஆனால் மாத கடையில் எந்தவித பொருட்களும் வாங்காமல், அனைத்து ரேஷன் பொருட்களும் வாங்கப்பட்டு விட்டதாக எங்களுக்கு குறுஞ்செய்தி வந்து விடுகிறது. 

மேலும் ரேஷன் பொருட்கள் வாங்கினால், டீத்தூள் போன்ற வேறு ஏதேனும் பொருட்கள் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தபடுகிறது,’ என்றனர். 

இதைத்தொடர்ந்து தாசில்தார் சரவணன் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்த விற்பனையாளர்களிடம் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை முறையாக விற்பனை செய்ய வேண்டும். மேலும் கை ரேகை கருவியில் ஏதேனும் கோளாறு இருந்தால் அதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். ரேஷன் பொருட்களுடன் வேறு பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது,’ என உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story