காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரி அரசு ஊழியர்கள் சாலை மறியல்; 53 பேர் கைது


காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரி அரசு ஊழியர்கள் சாலை மறியல்; 53 பேர் கைது
x
தினத்தந்தி 2 Feb 2021 11:12 PM GMT (Updated: 2021-02-03T04:51:03+05:30)

காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 53 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு பழைய பஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜபருல்லா தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் மங்கலபாண்டியன் சிறப்புரையாற்றினார்.

மறியல் போராட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு பணியில் காலியாக உள்ள நாலரை லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசுத்துறையில் அவுட்சோர்சிங் மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி மற்றும் கிராம உதவியாளர்கள், செவிலியர்கள் மற்றும் கிராமப்புற நூலகங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் கோஷம் எழுப்பினர்.
 
இதில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் ரெங்கசாமி மற்றும் நிர்வாகிகள் குமரேசன், ரெங்கசாமி, குணசேகரன், பழனிச்சாமி, பத்மாவதி, கருப்பையா உள்ளிட்ட 53 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story