போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் போது பாட்டிலின் மூடி வாயில் விழுந்ததால் விழுங்கிய குழந்தை மேலும் ஒரு அலட்சியம்
போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதில் மற்றொரு அலட்சிய சம்பவம் பண்டர்பூரில் நடந்து உள்ளது. சொட்டு மருந்து பாட்டில் மூடியை குழந்தை விழுங்கியதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புனே,
நாடு முழுவதும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. யவத்மால் மாவட்டம் காப்சி கோப்ரி கிராமத்தில் ஆரம்ப சுகாதார மையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக கிருமிநாசினி (சானிடடைசர்) கொடுக்கப்பட்ட அலட்சியம் நடந்து உள்ளது. இதில் 12 குழந்தைகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல மராட்டியத்தில் மேலும் ஒரு அலட்சியம் நடந்துள்ளது. பண்டர்பூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார மையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இதில் 1 வயது குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய போது அதன் மூடி குழந்தையின் வாயில் தவறி விழுந்தது. இதனால் அக்குழந்தை அந்த மூடியை விழுங்கியதால் அங்கிருந்த பணியாளர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story