தாக்குதலில் காயமடைந்த வாலிபர் சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
தாக்குதலில் காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர்,
வில்லியனூர் அருகே உள்ள தமிழக பகுதியான அம்மணங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் எழிலரசன் (வயது 20). இவர், கடந்த 26-ந் தேதி தனது நண்பர் பிரசிதரன் (25) என்பவருடன் சங்கராபரணி ஆற்றின் பாலத்தின் கீழ் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் 2 பேரையும் சரமாரியாக தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த பிரசிதரன் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எழிலரசன் லேசான காயம் அடைந்தார்.
இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் எழிலரசன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது முன்விரோதம் காரணமாக செல்லிப்பட்டு பகுதியை சேர்ந்த சஞ்சய், மருதுபாண்டி, ராஜேஷ், பிரசாந்த் ஆகிய 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரசிதரன் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story