என்எல்சியில் என்ஜினீயர் தேர்வு நேர்காணலை நிறுத்தி வைக்க வேண்டும்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி
என்எல்சியில் என்ஜினீயர் தேர்வு நேர்காணலை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
நெய்வேலி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நெய்வேலியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-’
நாட்டில் வேலையில்லாத திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை பற்றி மத்திய அரசோ, மாநில அரசோ கவலைப்பட்டதாக தெரியவில்லை.
என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நாட்டில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம். ஆண்டுக்கு சுமார் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டக்கூடிய இ்ந்த நிறுவனத்தில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை என்.எல்.சி. நிர்வாகம் பூர்த்தி செய்யாமல் உள்ளது.
மிகப்பெரிய முறைகேடு
என்.எல்.சி.யில் காலியாக உள்ள என்ஜினீயர் பணியிடங்களுக்கான தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில் 259 பணியிடங்களுக்கு சுமார் 8 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள் தேர்வாகி உள்ளனர் என்பது அதிர்ச்சியாக உள்ளது. இந்த தேர்வை ஒரு லட்சம் பேர் எழுதினார்கள்.
1,500 பேர் எப்படி தேர்வு செய்யப்பட்டனர். இந்த 1500 பேரில் தமிழகத்தை சேர்ந்த 8 பேருக்கும் வேலை கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
என்.எல்.சி. நிறுவனத்திற்காக சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடு, நிலங்களை வழங்கி வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு இந்த வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
விவசாயம் பாதிப்பு
மேலும் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசப்படும். என்ஜினீயர் பணியிட தேர்வு குறித்து என்.எல்.சி. நிர்வாகம் உடனடியாக விளக்கத்தை அளிக்க வேண்டும். அதுவரை இந்த நேர்காணலை நிறுத்தி வைக்க வேண்டும்.
என்.எல்.சி. நிறுவனத்தால் கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் என்.எல்.சி. நிறுவனம் வழங்கும் வேலைவாய்ப்பில் நெய்வேலியை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு குறிப்பிட்ட சதவீத்தை வழங்கி முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
Related Tags :
Next Story