பயணிகள் போக்குவரத்து மற்றும் பார்சல் மூலம் கடந்த 2 மாதங்களில் வருமானம் அதிகரித்துள்ளது
மதுரை ரெயில்வே கோட்டத்துக்கு பயணிகள் போக்குவரத்து மற்றும் பார்சல் மூலம் கடந்த 2 மாதங்களில் வருமானம் அதிகரித்துள்ளது.
மதுரை,
கொரோனா ஊரடங்கால் ரெயில் சேவை முடக்கப்பட்டது. இருப்பினும் அத்தியாவசிய தேவைகளுக்காக சரக்கு போக்குவரத்து மற்றும் பார்சல் சேவை மட்டும் செயல்பாட்டில் இருந்தது. இதற்கிடையே, கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, 70 சதவீத ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், தென்னக ரெயில்வேயில் மதுரை கோட்டத்துக்கு பயணிகள் போக்குவரத்து மூலம் வருமானம் அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த டிசம்பர் மாதம், மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்ற பயணிகளின் மூலம் ரூ.5 கோடியே 32 லட்சத்து 17 ஆயிரம் வருமானமாக கிடைத்துள்ளது.
நெல்லை ரெயில் நிலையம் மூலம் ரூ.4 கோடியே 22 லட்சத்து 52 ஆயிரமும், தூத்துக்குடி ரெயில் நிலையம் மூலம் ரூ.1 கோடியே 73 லட்சத்து 22 ஆயிரத்து 900-ம், திண்டுக்கல் ரெயில் நிலையம் மூலம் ரூ.1 கோடியே 34 லட்சத்து 77 ஆயிரமும், விருதுநகர் ரெயில் நிலையம் மூலம் ரூ.92 லட்சத்து 2 ஆயிரத்து 500-ம், கோவில்பட்டி ரெயில் நிலையம் மூலம் ரூ.89 லட்சத்து 57 ஆயிரத்து 200 வருமானமாக கிடைத்துள்ளது.
அதேபோல, கடந்த மாதம் மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 500 பயணிகள் மூலம் ரூ.5 கோடியே 81 லட்சத்து 29 ஆயிரம் வருமானமாக கிடைத்துள்ளது. நெல்லையில் இருந்து ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 100 பயணிகள் மூலம் ரூ.4 கோடியே 92 லட்சத்து 29 ஆயிரமும், தூத்துக்குடியில் இருந்து 37 ஆயிரத்து 950 பயணிகள் மூலம் ரூ.1 கோடியே 78 லட்சத்து 19 ஆயிரமும், திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து 53 ஆயிரத்து 600 பயணிகள் மூலம் ரூ.1 கோடியே 45 லட்சத்து 71 ஆயிரத்து 500, விருதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து 31 ஆயிரத்து 500 பயணிகள் மூலம் ரூ.1 கோடியே 6 லட்சத்து 19 ஆயிரத்து 500, கோவில்பட்டி ரெயில்நிலையத்தில் இருந்து 30 ஆயிரத்து 450 பயணிகள் மூலம் ரூ.1 கோடியே 2லட்சத்து 72 ஆயிரமும், தென்காசி ரெயில் நிலையத்தில் இருந்து 28 ஆயிரத்து 300 பயணிகள் மூலம் ரூ.93 லட்சத்து 9 ஆயிரமும் வருமானமாக கிடைத்துள்ளது.
இதற்கிடையே, பயணிகளுக்கான ரெயில்களில் பார்சல் பெட்டிகள் இணைக்கப்பட்டு சிறிய அளவிலான பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அதன்படி, கடந்த மாதம் பார்சல் பெட்டிகளில் அனுப்பி வைக்கப்பட்ட சரக்குகள் மூலமாக ரூ.36 லட்சத்து 40 ஆயிரம் வருமானமாக கிடைத்துள்ளது. இது கடந்த டிசம்பர் மாத பார்சல் வருமானத்தை விட 33 சதவீதம் அதிகமாகும்.
இந்த வருமான உயர்வுக்கு ஜனவரி மாதம் புத்தாண்டு விடுமுறை, பொங்கல் விடுமுறை, குடியரசு தின விடுமுறை உள்ளிட்ட அதிக விடுமுறை நாட்கள் இருந்ததால், பயணிகள் போக்குவரத்து அதிகரித்து வருமானம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story