மகாபலீஸ்வரர் கோவிலில் புதிய நிலவறை கண்டுபிடிப்பு


மகாபலீஸ்வரர் கோவிலில் புதிய நிலவறை கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 3 Feb 2021 11:56 PM IST (Updated: 3 Feb 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

மலைக்கோவிலூரில் புதுப்பிக்கும் பணியின்போது மகாபலீஸ்வரர் கோவிலில் புதிய நிலவறை கண்டுபிடிக்கப்பட்டது.

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே நாகம்பள்ளி ஊராட்சி மலைக்கோவிலூரில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான மிகவும் தொன்மையான மகாபலீஸ்வரர் மரகதவல்லி அம்பிகை கோவில் உள்ளது. இக்கோவில் மிகவும் சிதிலமடைந்த காரணத்தால் இந்து சமய அறநிலையத்துறை மூலமாக தற்போது புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் கோவில் வளாகத்தில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தரைப்பகுதியில் வினோதமான சத்தம் கேட்டுள்ளது. சந்தேகமடைந்த பணியாளர்கள் குறிப்பிட்ட இடத்தை தோண்டினார்கள். அப்போது அங்கு குகை போன்ற நிலவறை காணப்பட்டது. 

இதுதொடர்பாக நாகம்பள்ளி ஊராட்சி தலைவர் தமிழ்மணி, இந்து சமய அறநிலையத் துறைக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் இந்து சமய அறநிலையத்துறை கரூர் உதவி ஆணையர் சூரிய நாராயணன், கரூர் பசுபதீஸ்வரர் கோவில் நிர்வாக அலுவலர் சங்கரன், அரவக்குறிச்சி வரி ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று நிலவறையை பார்வையிட்டனர். பின்பு அவர்கள் முன்னிலையில் பணியாளர்கள் நிலவறையில் இறங்கி சோதனையிட்டனர். 

அப்போது அங்கு பழமையான கோவில் பூஜை சாமான்களான குத்துவிளக்கு, சரவிளக்கு, உலோகப் பாத்திரங்கள், சந்தனக் கிண்ணங்கள் உள்ளிட்டவை கிடைத்தது. இவையாவும் பழங்காலத்தில் இக்கோவிலில் பூஜை செய்ய பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாமென்று அறநிலைத்துறை அதிகாரிகள் கூறினார்கள். 

சுமார் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி குடகனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இக்கோவிலில் சுற்றி தண்ணீர் சூழ்ந்து கொண்டது.  அப்போது பூஜை சாமான்களை நிலவறையில் பத்திரமாக வைத்து கல் போட்டு மூடி இருக்கலாம் என்றும் இப்பகுதி பெரியோர்கள் கூறினார்கள். இதையடுத்து பழங்காலத்து பூஜை சாமான்கள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது

Next Story