தந்தை, மகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை
ராமநாதபுரத்தில் 260 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் கைதாகி சிறையில் உள்ள தந்தை மற்றும் மகனை போலீசார் காவலில் எடுத்து விசாரரைண மேற்கொண்டுள்ளனர்.
ராமநாதபுரம்,
மதுரை மாநகர தீவிர குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரோந்து சென்றபோது உசிலம்பட்டி ஏ.காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவசாமி மகன் செல்லத்துரை (வயது39) என்பவரை பிடித்து சோதனையிட்டபோது அவரிடம் இருந்து 34 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர் அளித்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் நேருநகர் பகுதியில் முகம்மது அலி மகன் நவாஸ்கான் (53) என்பவரின் வீட்டில் 8 மூடைகளில் 260 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நவாஸ்கான் மற்றும் அவரின் மகன் வாசிம்கான் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கஞ்சா கடத்தலில் பெரிய நெட்வொர்க்காக செயல்பட்டு வந்த மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த முக்கிய குற்றவாளிகளான நவாஸ்கான், அவரின் மகன் வாசிம்கான் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்வதற்காக கேணிக்கரை போலீசார் புதுக்கோட்டை போதைப்பொருள் கடத்தல் பிரிவு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இதனை ஏற்று நீதிபதி 2 நாட்கள் அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தந்தையும் மகனையும் போலீசார் ராமநாதபுரம் அழைத்து கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story