புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை: எடை குறைவாக பிறந்த குழந்தையை காப்பாற்றிய அரசு டாக்டர்கள்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 4 Feb 2021 1:23 AM IST (Updated: 4 Feb 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எடை குறைவாக பிறந்த குழந்தையை டாக்டர்கள் குழுவினர் காப்பாற்றினர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், மறவன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துவீரன். இவரது மனைவி இந்திராணி. கர்ப்பிணியான இந்திராணிக்கு கடந்த டிசம்பர் மாதம் 19-ந் தேதி சுகப்பிரசவம் மூலம் அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தை எடை குறைவாக இருந்தது. அதாவது, அந்த குழந்தை 875 கிராம் மட்டுமே இருந்தது.

இதனால், அந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டது. குழந்தைக்கு மூச்சுத்திணறல் இருந்ததால் வென்டிலேட்டர் கருவி மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு நுரையீரல் வளர்ச்சிக்காக சர்பேக்டண்ட் மருந்தும் நுரையீரலுக்கு செலுத்தப்பட்டது.

அந்த குழந்தையை காப்பாற்ற அரசு டாக்டர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஒரு வார தீவிர சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் சுவாசிக்கும் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து செயற்கை சுவாசம் நீக்கப்பட்டு குழந்தைக்கு குழாய் மூலம் சிறிதளவு பால் கொடுக்கப்பட்டது.

மேலும், குழந்தைக்கு கிருமி தொற்றுக்கான சிகிச்சையும் மஞ்சள் காமாலைக்கான போட்டோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து குழந்தைக்கு மூச்சுத்திணறல் முழுவதும் சரியான பிறகு தாய்ப்பால் பாலாடை மூலம் வழங்கப்பட்டு பிறகு நேரடியாக தாய்ப்பால் வழங்கப்பட்டது. குழந்தையின் எடை அதிகரிக்க கங்காரு தாய் கவனிப்பு முறை சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது.

48 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் எடை 1.1 கிலோவாக அதிகரித்தது. அதனைத்தொடர்ந்து குறைமாத குழந்தைகளுக்கான ஆர்.ஓ.பி. கண் பரிசோதனை, ஓ.ஏ.இ. எனப்படும் செவித்திறன் பரிசோதனை மற்றும் தலைக்கான ஸ்கேன் பரிசோதனை ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், குழந்தை பூரண நலன் பெற்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. குறைவான எடையுடன் பிறந்த குழந்தையை காப்பாற்றிய அரசு டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் பூவதி பாராட்டு தெரிவித்தார்.

Next Story