தஞ்சையில் தொழிலாளர் சட்ட தொகுப்பு நகல் எரிப்பு போராட்டம்


தஞ்சையில் தொழிலாளர் சட்ட தொகுப்பு நகல் எரிப்பு போராட்டம்
x
தினத்தந்தி 3 Feb 2021 8:11 PM GMT (Updated: 3 Feb 2021 8:11 PM GMT)

தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட திருத்தத்தை ரத்து செய்ய கோரி அனைத்து தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் சட்ட தொகுப்பு நகலை எரித்து போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர், 

தஞ்சை ரெயிலடியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தொழிலாளர் சட்ட தொகுப்பு நகல் எரிப்பு போராட்டம் நேற்று மாலை நடந்தது. 

இதற்கு தொ.மு.ச. மாவட்ட செயலாளர் சேவியர் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட செயலாளர் தில்லைவனம், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், ஏ.ஐ.சி.சி.டி.யூ. மாவட்ட செயலாளர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில், தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை மத்தியஅரசு கைவிட வேண்டும். கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும். மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள மக்கள் விரோத அம்சங்களை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைச் செயலாளர் அன்பு, ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு தொழிலாளர் சட்ட தொகுப்பு நகலை தீ வைத்து எரித்தனர். இதை பார்த்த போலீசார் விரைந்து வந்து சட்ட தொகுப்பு நகலை பறிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் சட்ட தொகுப்பு நகலை எரித்ததுடன் கிழித்து வீசினர்.

Next Story