சேலத்தில் 2-வது நாளாக அரசு ஊழியர்கள் சாலைமறியல்: 86 பேர் கைது
சேலத்தில் 2-வது நாளாக அரசு ஊழியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 86 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சேலம்,
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சாலை பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட 41 மாத காலத்தை பணிக்காலமாக கருதி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகக்கூறி 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று 2-வது நாளாக அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வாசுதேவன், சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் தங்கவேல் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம், ஒப்பந்த ஊதியம், அவுட்சோர்சிங் ஊதிய முறைகளை ரத்து செய்து வரையறுக்கப்பட்ட ஊதிய முறைகளை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 86 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோட்டை பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
பின்னர் அவர்களை மாலையில் போலீசார் விடுவித்தனர். ஆனால் அவர்கள் வெளியே செல்லாமல் மண்டபத்துக்குள்ளே அமர்ந்து கொண்டு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து அரசு ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் இரவில் அவர்கள் சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்துக்கு சென்று அங்கு தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story