நெல்லை அருகே முதியவர் கொலை வழக்கில் மாணவர்கள் உள்பட 5 பேர் கைது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 Feb 2021 11:35 PM GMT (Updated: 3 Feb 2021 11:44 PM GMT)

நெல்லை அருகே முதியவர் கொலை வழக்கில் மாணவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, 

நெல்லை பாளையங்கோட்டை அருகே பர்கிட்மாநகரத்தைச் சேர்ந்தவர் முகம்மது அபுபக்கர் சித்திக் (வயது 48). இவருடைய மகன் இர்பான் (வயது 16). பிளஸ்-1 மாணவரான இவர் நேற்று முன்தினம் மாலையில் அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்களுடன் கிரிக்கெட் விளையாடியபோது தகராறு ஏற்பட்டது.

பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்த இர்பான், இரவில் தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில வாலிபர்கள் அவரை சரமாரியாக தாக்கினர். இர்பானின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அவரது தாத்தா முகம்மது சர்புதீன் (65) மற்றும் குடும்பத்தினர் தடுக்க முயன்றனர்.

இதில் வாலிபர்கள் கீழே தள்ளி விட்டதில் படுகாயமடைந்த முகம்மது சர்புதீனை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார். மேலும் காயமடைந்த இர்பான், அவரது தாயார் உள்ளிட்ட 3 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை தாலுகா போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (51), தினேஷ் (23), சுரேஷ் (24) மற்றும் 2 பள்ளிக்கூட மாணவர்கள் என மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை வழக்கில் பள்ளி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story