சேலம் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 318 பேருக்கு கொரோனோ தடுப்பூசி - சுகாதார பணிகள் துணை இயக்குனர் பேட்டி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 4 Feb 2021 5:29 AM IST (Updated: 4 Feb 2021 5:39 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 318 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் செல்வக்குமார் தெரிவித்தார்.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 318 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த தடுப்பூசி 100 சதவீதம் பாதுகாப்பானது என்று மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் செல்வக்குமார் தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் சேலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மேட்டூர், எடப்பாடி, ஆத்தூர், ஓமலூர், தம்மம்பட்டி, தலைவாசல், காடையாம்பட்டி உள்பட 12 அரசு ஆஸ்பத்திரிகளில் தற்போது முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக 52 ஆயிரத்து 800 தடுப்பூசி டோஸ் மருந்து கொண்டு வரப்பட்டு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள மண்டல குளிர்பதன கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் சுகாதார முன் களப்பணியாளர்களை தொடர்ந்து நேற்று முதல் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செல்வக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக பகுதிகளில் கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும் மையங்களில் பணியாற்றும் அனைத்து மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுடன் முகாமை நடத்த தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் பணிபுரிந்து வரும் சுகாதார முன் களப்பணியாளர்கள் உள்பட மொத்தம் 26 ஆயிரத்து 318 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் மூலம் சேலம் சுகாதார மாவட்டத்தில் 8 ஆயிரத்து 520 பேருக்கும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 2 ஆயிரத்து 932 பேருக்கும் என மொத்தம் 11 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வருவாய்த்துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 1, 384 பேரின் விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்து தற்போது அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல், காவல்துறையை சேர்ந்த 1, 684 பேர் தடுப்பூசி போடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும். அவர்கள் விரும்பும் அனுமதி அளிக்கப்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அதன் விவரத்தை மாவட்ட சுகாதாரத்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பாதுகாப்பானது. இதனால் சுகாதாரத்துறை மட்டுமின்றி வருவாய்த்துறை, காவல் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை என கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுவோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story