ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் சலூன் கடைக்காரர் தீக்குளித்து தற்கொலை
கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் விரக்தி அடைந்த சலூன் கடைக்காரர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பூர்,
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 6-வது பிளாக்கை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 35). இவர், ஓட்டேரியில் சொந்தமாக சலூன் கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி வினோதினி. இவர்களுக்கு திருமணமாகி 9 வருடங்கள் ஆகிறது. இதுவரை குழந்தை இல்லை.
தியாகராஜன் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தனது நண்பர்கள் உள்பட பலரிடம் கடன் வாங்கியதுடன், ரூ.6 லட்சம் வரை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததாக தெரிகிறது.
இதையடுத்து அவரது பெற்றோர், தங்கள் வீட்டை அடமானம் வைத்து அந்த கடனை திரும்ப செலுத்தினர். ஆனால் அதன்பிறகும் தியாகராஜன், கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இதற்காக அடமானம் வைத்த வீட்டை விற்று, கடனை கொடுத்தார்.
பணத்தை இழந்தார்
ஆனால் அதன் பின்னரும் தியாகராஜன், தனியார் நிதி நிறுவனங்களில் ரூ.5 லட்சம் கடன் வாங்கி மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து உள்ளார். இந்த கடனுக்காக மாத தவணை கட்டச்சொல்லி நிதி நிறுவனங்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் ரூ.5 லட்சத்துக்கு வட்டிக்கு மேல் வட்டி போட்டு ரூ.13 லட்சம் வரை கேட்டு நிதி நிறுவன முகவர்கள் அவருக்கு தொல்லை கொடுத்ததால் பணத்தை கொடுக்க முடியாமல் ஓட்டேரியில் உள்ள சலூன் கடையை மூடிவிட்டு தியாகராஜன் மட்டும் கொடுங்கையூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார்.
தீக்குளித்து தற்கொலை
ஆனால் நிதி நிறுவன முகவர்கள் இங்கு வந்தும் கடனை திரும்ப கேட்டு தொல்லை கொடுத்ததால் மனம் உடைந்த தியாகராஜன் நேற்று முன்தினம் இரவு தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார்.
இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் தியாகராஜன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story